பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், எங்கள் கட்சியின் மைலேஜை அதிகரிக்க பெட்ரோல் போட வரவில்லை என்று டிஜிபியை சந்தித்தப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, டிஜிபி டி.கே. ராஜேந்திரனை அவரது அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று சந்தித்து மனு அளித்தார்.
மேலும் படிக்க - Pollachi Sexual Abuse Live Updates : பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு லைவ்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "நாங்கள் புகார் அளிக்க வரவில்லை. எங்கள் பதற்றத்தை வெளிப்படுத்த வந்தோம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கையில் எங்களுக்கு இருந்த மாறுபட்ட கருத்துகளையும் டிஜிபியிடம் முன்வைத்தோம்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: டிஜிபியை சந்தித்தப் பிறகு பேசிய கமல்ஹாசன்
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் படம் மற்றும் பெயர்களை நாம் பரவச் செய்யக் கூடாது. இது அவர்களை மேலும் பாதிக்கும். உணர்ச்சிப் பெருக்கில் நாம் அந்த தவறை செய்துவிடக் கூடாது. டிஜிபி தரப்பிலும் என்னிடம் இது வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசியல் ஆதாயத்திற்காக இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் எனவும் டிஜிபி கேட்டுக் கொண்டார்.
சமூக தளங்களில் பலரும், அரபு நாடுகளில் இருப்பதைப் போன்று குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என சொல்வது போதெல்லாம் செய்ய முடியாது. சமூக தளங்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் சட்டம் முழுதாக தெரிய வாய்ப்பில்லை. சட்டத்திற்குட்பட்டு தான் இங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் கட்சிக்கு பெட்ரோல் போட்டு மைலேஜை ஏற்றிக் கொள்வதற்காக இங்கு வரவில்லை" என்றார்.
மேலும், முழு விசாரணைக்கு முன்பாகவே அரசியல்வாதிகளின் மகன்களுக்கு இந்த விவகாரத்தை தொடர்பில்லை என்று கோவை எஸ்.பி. கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "ஒரு சிறிய அதிகாரி அங்கு அவ்வாறு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து விசாரிப்பதாக இங்கு ஒரு பெரிய அதிகாரி என்னிடம் தெரிவித்து இருக்கிறார்" என்றார்.