/tamil-ie/media/media_files/uploads/2018/04/a792.jpg)
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. விரிவாக்கம் செய்யப்படும் இடம் சிப்காட்டில் உள்ளதா..? என ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போது ஆய்வு செய்தால் எந்த உபயோகமும் இல்லை. அதனால் உண்மை நிலையும் தெரியாது. மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா? ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புப் பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மக்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக நான் இங்கே வந்திருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். நான் 5 வயதிலேயே கேமிரா முன்பாக வந்தவன். ஆயிரம் கேமிராவைக் கண்டவன். மக்களே எனக்கு தேவைக்கு அதிகமான விளம்பரத்தை தேடித் தந்திருக்கிறார்கள். அதனால், நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 கோடி வீதம் 120 பேருக்கு ரூ.600 கோடி கொடுப்பதாக ஆலை நிர்வாகம் என பேரம் பேசி உள்ளது. அந்தப் பணத்தை இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்?. சட்ட விதிமுறைகளை மீறி இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களது அனுமதியும், ஒத்துழைப்பும் இல்லாமல் இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆலையின் விரிவாக்கப் பகுதி சிப்காட் வளாகத்தின் உள்ளே இருப்பதாக ஆலை நிர்வாகம் சொல்வது கூட தவறானது என தெரியவந்துள்ளது.
தற்போது போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நான், இனி, அவர்களின் குரலைச் செல்லும் இடமெல்லாம் கொண்டு சேர்ப்பேன். போராடும் மக்களுக்காக சட்டரீதியான போராட்டத்தையும் மக்கள் நீதி மய்யம் முன் எடுத்துச் செல்லும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.