திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கலந்து கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்து இருந்தார். இந்தநிலையில் அதிகத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கடம்பத்தூர் வட்டார அலுவலர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காலை 10.30 மணியளவில் கமல்ஹாசன் கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காரில் வந்தார்.
அப்போது கிராம சபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவர் பார்வையாளராக பொது மக்களுடன் நின்று நிகழ்ச்சிகளை அவர் உன்னிப்பாக கவனித்தார். சிறிது நேரத்தில் கிராமசபை கூட்டம் நிறைவடைந்தது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் மாதிரி கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் மாதிரி கிராமசபை கூட்டம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கமல் உரையாற்றுகையில், நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இது இன்றிலிருந்து எங்கள் கிராமம். திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் அரசு பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். திறமையை வளர்த்துக் கொள்ள அதிகத்தூர் கிராம மக்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். நீர் தேங்க வசதியாக குளம், குட்டைகள் சீரமைக்கப்படும், ஏரி புனரமைக்கப்படும். நரிக் குறவர், இருளர் வாழ்க்கைத்தரம் மேம்பட மய்யம் பாடுபடும். நீங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக கிராமத்தை தத்து எடுக்கவில்லை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் எங்களால் 12,000 கிராமங்களையும் தத்தெடுக்க முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், நரிக் குறவ பெண்கள் கமல்ஹாசனுக்கு பாசிமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.