காவிரிக்காக நல்லக்கண்ணு தலைமையில் மே 19-ம் தேதி முதல் கூட்டம் - கமல்ஹாசன்

காவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து மே 19-ம் தேதி முதல் கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

காவிரி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து இன்று ஆலோசனை நடத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பொருட்டு ஒரு விரிவான சந்திப்பை இன்று அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம்.

அதன் அடிப்படையில், அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.

அதற்கான முதல் கூட்டம் வருகின்றம் மே மாதம் 19 ம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை மெட்ரோ மேனர் ஓட்டல், 97, சிடன்ஹேம்ஸ் சாலை, நேரு அரங்கம், நுழைவாயில் எண் 4 ,எதிர்புறம், பெரியமேடு சென்னை- 600003 என்கின்ற முகவரியில் நடைபெறும்.

அனைத்து விவசாய சங்கங்கள், அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், அக்கறையுள்ள பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

படிப்படியாக நமது உரிமைகளை இழந்துகொண்டு வருகிறோம். இது அரசியல் விளையாட்டு. இதற்கு ஒரே வழி, அனைத்து விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இது மக்களின் பிரச்சினை என்பதால், கட்சிகளின் வரைகோடுகளைத் தாண்டி எல்லோரும் ஒன்றாக தமிழர்கள் என்ற ஒரு குடையின்கீழ் நிற்க வேண்டும். இதில் யார் முதன்மை என்பது இல்லை. நல்லகண்ணு ஐயா தலைமையில் இது நடைபெற இருக்கிறது. இது விழா அல்ல, ஒரே நாளில் முடிந்து விடுவதற்கு. தொடர்ந்து நடக்கப் போகும் உரையாடல்” என்று கமல் தெரிவித்தார்.

×Close
×Close