சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடக்கும் என்றார்.
ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த கமல், "எனது கட்சியில் திராவிடத்தையும் இழக்கவில்லை, தேசியத்தையும் இழக்கவில்லை. ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை. நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்க வந்த கூட்டம் அல்ல. கட்சியின் பெயர் மற்றும் லோகோ என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு?. மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனத் தலைவர் என்ற ஒரு பொறுப்பு உருவாக்கப்படும். அரசு ஒத்துழைக்காவிட்டாலும் தத்தெடுக்கும் கிராமங்கள் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அப்போது திமுகவுடன் இணைந்து செயல்படுவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "மக்கள் பிரச்சனைக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. தேர்தல் நேரத்தில் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.
மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் ஏப்.4ம் தேதி திருச்சியில் நடைபெறும்" என்றார்