கமல்ஹாசன் இரண்டாம் நாளாக இன்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கிறார். இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
நேற்றைய சந்திப்பு நடந்து கொண்டு இருந்த போதே, பிப்ரவரி 24-ம் தேதி மதுரையில் கமல் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், "அப்படி திட்டம் இல்லை. பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்களும் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் பயணம் இருக்கும். இடம், நேரம் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நம் இலக்கு, பாதை எப்படி இருக்கும் என்பதை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்க உள்ள சுற்றுப்பயணத்தின்போது அறிவிப்பேன்" என கமல்ஹாசன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக கமல் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். திருச்சி, தஞ்சை உட்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் கமல் சந்தித்து பேசி வருகிறார்.
பிற்பகல் 15.35 - ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், "லட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும். மக்களை நோக்கிய பயணம் இது. இந்த பயணம் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம். நமது வெற்றி நிச்சயம். இதற்கு முன் ரசிகர்களை நான் எந்த கட்சி என்று கேட்டதில்லை. ஆனால், இனி கண்டிப்பாக கேட்பேன்" என்றார்.
பிற்பகல் 15.00 - தங்களது இல்ல விழாவிற்கு கமல்ஹாசனை அழைத்த அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா, அழைப்பிதழை கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
பிற்பகல் 14.30 - மாவட்டம் வாரியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதியம் 13.30 - ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், கமலை சந்திக்க அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா வந்துள்ளார்.
மதியம் 12.05 - மாவட்ட நிர்வாகிகளுடன் அவர்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார்.