இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி?. இதற்குமுன் இங்கு நடைபெற்ற விபத்துகள்

Indian 2 accident : இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகியுள்ள சம்பவம், அந்த படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு...

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகியுள்ள சம்பவம், அந்த படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

 

EVP படப்பிடிப்பு தளத்தின் வரலாறு மற்றும் அங்கு நடந்த விபத்துகள்

சென்னையை அடுத்த பூந்தமல்லி, பழஞ்சூர், பாப்பான்சத்திரத்தில் 2012 ஆம் ஆண்டு ஈவிபி பொழுதுபோக்குப் பூங்கா தொடங்கப்பட்டது. பொழுதுபோக்கு பூங்காவிற்குள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தொடங்கிய வேகத்திலேயே மூடப்பட்டது. மீண்டும் பொழுது போக்கு பூங்கா செயல்படத்தொடங்கிய போது விபத்துகள் அடித்தடுத்து நடக்கத் தொடங்கின. அபியாமெக் என்ற விமான பணிப்பெண் ராட்டினத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். அதனைத் தொடர்ந்து மூடப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா பின்னர் படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு நடிகைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். மற்றொருவர் அங்கு இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்திற்கு கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப் பட்ட போது ராட்சத கிரேன் மூலம் மின்விளக்கு பொருத்தப்பட்டது அப்போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்துபோனார்.

தற்போது ஈவிபி படப்படிப்பு தளத்துக்கு மிகவும் பரிட்சயமான கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close