மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 'மய்யம் விசில் ஆப்' இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கட்சியை அறிவிக்கும் முன் 'மய்யம் விசில் மொபைல் ஆப்' குறித்து ஏற்கனவே பேசியிருந்தார். அவர் அறிவித்தபடி, இந்த 'விசில் ஆப்' இன்று மாலை 5 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இது குறித்து, கமல், கூறுகையில், "விசில் செயலி, மக்கள் குறைகளை ஒரே நொடியில் சரி செய்யும் மந்திரக்கோல் அல்ல. விசில் செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகவும் இருக்கும், போலீஸுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ இது மாற்று அல்ல. உங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், அபாயச் சங்கு எனும் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம். மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். நாளை திருவள்ளூரில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பேன்" என்றும் கமல் கூறினார்.
மேலும், "உங்கள் கைபேசி எண்ணையும் மின்னஞ்சலையும் வைத்து மய்யம் விசிலில் பதிவு செய்யவும். உங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், அபாயச் சங்கு எனும் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம். குடிமக்கள் ஒரு பிரச்சனையை புகார் அளித்த பின் களவீரர் / கள வீராங்கனை அதை நேரில் சென்று பார்த்து அப்புகார் உண்மை என உறுதி செய்த பின்னர் அப்புகாரை செயலியில் பதிவு செய்வதற்கு அனுமதி அளிப்பார். நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை, குற்றங்களை, ஊழல்களை பார்த்தும் பார்க்காதது போல கைகட்டி வேடிக்கை பார்த்தது போதும். நாளை மே 1 ஆம் தேதி நாங்கள் தத்து எடுத்திருக்கின்ற அதிகத்தூர் கிராமத்திற்கு பெற்றோர்களாக மக்கள் நீதி மய்யம் சார்பாக செல்ல உள்ளோம். மய்யம் விசில் செயலி என்ன செய்யும் என்னவெல்லாம் செய்யாது என்பதை ஊடகங்கள் பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும். களவீரர் / களவீராங்கனையாக நீங்கள் உங்களை பதிவு செய்து கொள்ளலாம்" என்றும் அவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.