திரைத் துறையில் புதிய புதிய தொழில்நுட்பங்களை தேடிக் கண்டுபிடித்து அதனை தனது திரைப்படங்களில் புகுத்தி வெற்றி கண்டவர் கமல்ஹாசன். நாம் நிகழ்காலம் குறித்து சிந்தித்தால், 10 வருடம் முன்னோக்கி சென்று எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது கமல்ஹாசன் ஸ்டைல். ஒருவர் கமல்ஹாசனை சந்திக்க வேண்டுமென்றால், அவரிடம் ஏதாவது ஒரு புதிய வரவு புத்தகம் இருந்தால் போதும், நிச்சயம் அப்பாயிண்ட்மென்ட் கன்ஃபார்ம் என்பார்கள்.
அரசியலுக்கு வந்த பிறகும் சரி.. அதற்கு முன்னரும் சரி... ட்விட்டர் அவருடைய மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது. சில அரசியல் கட்சித் தலைவர்கள், கமல்ஹாசன் ட்விட்டரில் பேசுவதை விட்டுவிட்டு, களத்தில் வந்து பேச வேண்டும் என விமர்சித்த போது, 'நான் நேரில் வந்தால் கூட, ட்விட்டரில் கூடும் கூட்டம் அங்கு கூடாது' என்று தொழில்நுட்பம் மீதான தனது புரிதலை தெரியப்படுத்தினார்.
கட்சி ஆரம்பித்து, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பிக்பாஸ் மேடையில் வந்து நிற்கும் கமல்ஹாசன், உலக நாயகன் என்பதைத் தாண்டி மக்களின் மனதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அவரது விசில் மய்யம் ஆப் மூலம், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை நேரடியாக களத்திற்கே சென்று ஆய்வு நடத்துகிறார்.
ஒவ்வொரு நாளும், மக்களிடம் நெருங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், அதன் நீட்சியாக ட்விட்டரில் நேரடியாக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளதாக இன்று காலை அறிவித்தார். AskKamalHaasan என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்விகளைக் கேட்கலாம் என்றும், அதில் சிலவற்றுக்கு பதிலளிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அவரது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் பலரும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.