கட்சியை கலைக்க தயங்க மாட்டேன்: நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை

Kamalhaasan video : இடஒதுக்கீடு பெறுபவர்கள் என்றைக்கு அது தேவையில்லை என கூறுகிறார்களோ, அன்றுதான் இடஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்

By: August 16, 2020, 1:07:05 PM

கொள்கை தவறி செயல்பட்டால் கட்சியை கலைக்க தயங்க மாட்டேன் என்று மக்கள்நீதி மய்யம் கட்சியினர், நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி வாய்ப்புகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். மாநில துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட 300 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் அவர் பேசியதாவது, கட்சியில் யாரும் தங்களது மதத்தை பின்பற்றி கடவுளை வழிபட எந்த தடையும் இல்லை. நான் பகுத்தறிவாளன். வழிபாடு செய்யுமாறு என்னை கூறாதீர்கள்.

பிற கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது கண்ணை மூடிக்கொண்டு ஒரு கட்சியை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ கிடையாது. தமிழக அரசின் செயல்பாடுகளில் நமக்கு பலவிதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, தமிழகஅரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என்பதாலேயே, அந்த கொள்கையை நாம் ஆதரிக்க முடியாது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது என்பது நம் கொள்கை.

மக்கள் பணிகளை செய்ய வந்ததற்கு முரணான கூட்டணியை ஒருபோதும் அமைக்க மாட்டோம். மக்கள் நீதி மய்யம் ஜனநாயக கட்சி. இங்கு இருக்கும் அனைவரும் நம்கொள்கைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஒவ்வொருதொண்டனுக்கும் கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டனையும் கட்சி நிர்வாகிகள் மதிக்க வேண்டும்.

என் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாட்களை மக்கள் நலனுக்காக பணியாற்ற வந்துள்ளேன். எனவே, கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டால் கட்சியை கலைத்துவிட்டு வேறு அமைப்பை தொடங்கி விடுவேன். இட ஒதுக்கீடு என்பது வசதிக்கான வாய்ப்பு அல்ல. அது அதிகாரப் பகிர்வு. இடஒதுக்கீடு பெறுபவர்கள் என்றைக்கு அது தேவையில்லை என கூறுகிறார்களோ, அன்றுதான் இடஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்.

மதுவிலக்கை ஒரே நாளில் கொண்டுவர முடியாது. உடனடிமதுவிலக்கால் மாஃபியாக்கள் தோன்றக்கூடும். எனவே, மதுஅருந்துவோர் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துதான் பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அதற்கு, மதுஅருந்துவோருக்கு உரிய சிகிச்சை அளித்து, அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும். கள்ளச் சாராயத்தால் ஏற்கெனவே பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kamalhaasan makkal needhi maiam tamilnadu asembly election warning online meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X