நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து இன்று தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக காலை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் செய்தியாளர் ஒருவர், 'அப்துல்கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத நீங்கள், அவரது இல்லத்தில் இருந்து அரசியல் கட்சியை தொடங்குவது ஏன்?' என கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்த கமல்ஹாசன், "நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அது என் நம்பிக்கை" என்று கூறினார்.
ஆனால், ஏன் கமல்ஹாசன் இவ்வாறு பதில் அளித்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. கமலை முதன் முதலாக 'உணர்ச்சிகள்' படம் மூலம் ஹீரோவாக்கியவர் இயக்குனர் ஆர்.சி.சக்தி. இவர் கடந்த 2015ம் ஆண்டு மறைந்த போது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரை கமல்ஹாசன் வந்திருந்தார். அதேபோல், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மறைவிலும் கமல் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 'ஆச்சி' மனோரமா மறைவிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகை சுஜாதாவின் மறைவிற்கும் நேரில் வந்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ரஜினி, கமல், இளையராஜா ஆகியோர் திறந்த வேனில் வந்தனர்.
இவ்வளவு ஏன்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த போது, அவரது உடல் கொண்டுச் செல்லப்பட்ட திறந்தவெளி வேனின் மேல் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அமர்ந்து சென்றதை நாடே பார்த்தது. இதையும் மீறி, கமல்ஹாசன் எப்படி நான் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை என்று தெரிவித்தார் என புரியவில்லை.
நடன இயக்குனர் ரகுராம் மறைவின் போது நேரில் வந்து கமல்ஹாசன் கண்ணீர் அஞ்சலி செலுத்திய போது எடுத்த வீடியோ!.
https://www.youtube.com/embed/zg64XimVvmg
இவ்வளவு சான்றுகளுக்கு பிறகும், கமலின் கூற்றுப்படி, இறுதி ஊர்வலங்களில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் மறைந்த சக கலைஞர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது போன்று, அப்துல் கலாமிற்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாமே!.
தனது இந்த பதிலுக்கு கமல்ஹாசன் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், வெறும் வாக்கு அரசியலுக்காக கமல்ஹாசன் அப்துல்கலாமை பயன்படுத்துகிறாரா? என்று கடுமையாக கேள்விகள் எழத் தொடங்கும். அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை எனில், அவரது அரசியல் பயணித்தின் முதல் படியிலேயே அவர் சறுக்கியதாகவே அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்.