Advertisment

சிலரை பார்த்து "ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்?" என கேட்கத் தோன்றுகிறது - கமல்ஹாசன்

என்னை கட்சியின் கடைமட்ட தொண்டனாக தான் நினைக்கிறேன். நான் கட்சியின் ஆரம்ப கால ரசிகன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிலரை பார்த்து "ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்?" என கேட்கத் தோன்றுகிறது - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை 10.30 மணியளவில் யூ-டியூபில் நேரடியாக  பேசினார். அவர் தனது உரையில், "நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை. பள்ளிகள், அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் வேண்டும். முதல்கட்டமாக அதிகதூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளோம். கிராமத்தை தத்தெடுப்பதற்கு முதலில் அந்த கிராம மக்களுடன் பேச வேண்டும். ஊர் பெரியவர்களுடன் பேச வேண்டும் அதற்கு பின் தான் தத்தெடுக்க முடியும். அடுத்து தத்தெடுக்கப் போகும் கிராமங்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

Advertisment

மய்யம் விசில் செயலி மூலம் மிகப்பெரிய அளவில் குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் தீர்வை நோக்கி நகர்ந்தே தீர வேண்டும். குடிநீருக்காக நடைபெறும் போராட்டம், குறிப்பிட்ட காலத்துக்கு பின் முடிந்துவிடும் என நினைத்தால் அது ஒரு அரசியல் அறியாமை.

அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு சில நேரத்தில் எடுத்த முடிவல்ல. பல பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு. ஓட்டு அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று நினைத்து தான் அரசியலுக்கு வராமல் இருந்தேன். நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உள்ளது. எல்லோரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலை வந்து விட்டது. அதை மாற்ற மீடியாக்கள் மூலம் முயற்சித்தேன். மீடியா என்பது ஒரு ஆராய்ச்சி மணி தான். மக்கள் மற்றும் மீடியாவின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்துவிட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்

நிஜமாக அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிறைய படி ஏறி செல்ல வேண்டும். இறங்கி வர வேண்டும் என்பது கர்வம். ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று தோன்றவில்லை. ஆனால் சிலரை பார்த்து "ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்" என கேட்க தோன்றுகிறது. நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் நான் முதல்வரா, எதிர்க்கட்சி தலைவரா எது ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் நான் என்ன ஆக வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

புரட்சி, போராட்டம் தேவைப்பட்டால் செய்யலாம். ஆனால் இளைஞர்கள் நினைத்தால் மிக பெரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஜனநாயகம் என்ற மிகப் பெரிய ஆயுதம் கொண்டு, வன்முறையின்றி அதை செய்ய முடியும். வெறும் டுவிட்டரில் மட்டும் கருத்து சொல்கிறேன் என்ற நிலை மாறி 2 மாதம் ஆகி விட்டது. உடலில் ஓடும் ரத்தம் கொதிக்க கொதிக்க வறுமை போய்விடும். சாதி பிரிவினைகள் தான் வறுமைக்கு காரணம் என நினைக்கிறேன். ஏழ்மை உருவாக்கப்படுவது. அதற்கு வண்ணமில்லை. வறுமையின் நிறம் சிவப்பு என்பது வெறும் சினிமாவின் பெயர் தான்.

வன்முறை இல்லாமல் நியாயமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். மக்கள் நலனுக்கு இடையூறு செய்பவர்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படி பதில் சொல்ல வேண்டும். விவசாயிக்கு பெண் தர மறுக்கும் நிலை இருக்கும் போது எப்படி விவசாயம் செய்ய முன்வர முடியும் என்று கேட்கிறீர்கள். அதற்கு சிறந்த உதாரணம் நான் தான். கூத்தாடி என்று கூறி ஊருக்கு வெளியே ஒரு காலத்தில் ஒதுக்கி வைப்பட்டவர்கள் தான் இன்று வளர்ச்சிக்கான வழி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை கூத்தாடி என்று சொன்னால் கோபப்படமாட்டேன். அப்படி சொன்னால் சிதம்பரத்தில் போய் பாருங்கள் அங்க ஒருவர் கூத்தாடிக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்வேன்.

பாலியல் குற்றங்களை தடுக்க அரசாட்சி செய்ய வேண்டியதை விட மனசாட்சி செய்ய வேண்டும். பலாத்கார குற்றங்களை தடுக்க அரசு திட்டமும், சட்டமும் கொண்டு வர வேண்டியதில்லை ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் ஆண் மகனுக்கும் பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என கற்று தர வேண்டும். ஆண் பிள்ளையை கண்டிக்காமல், பெண்களை மட்டும் பாதுகாப்பாக இரு என கூறி வளர்ப்பது சரியாகாது.

மய்யத்தை மாதாந்திர இதழாக கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன், டிவி ஆரம்பிப்பதை பற்றி யோசிக்க வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய நோய். அதற்கு தேர்ந்தெடுக்கும் பாதை நாம் முடிவெடுக்க வேண்டியது. ஜாதியை பற்றி பேசுவது மட்டுமல்ல, நினைப்பதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை இன்றே செய்வோம். அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஜாதி என்று ஒன்று இருந்ததா என கேட்கும் நிலை வர வேண்டும். நம்மால் முழுவதுமாக செய்ய முடியவில்லை என்றாலும் அதுற்கான விதையை தூவிச் செல்ல வேண்டும்.

என்னை கட்சியின் கடைமட்ட தொண்டனாக தான் நினைக்கிறேன். நான் கட்சியின் ஆரம்ப கால ரசிகன். இறுதி வரை கடைமட்ட தொண்டனாக இருக்க வேண்டும் என முடிவு செய்தே கட்சி துவங்கி உள்ளேன். 2 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். அதுவும் கிராமத்தை நோக்கிய பயணத்தின் பயணமாக இருக்கும். பத்திரிகை மூலமாக தெரிய வரும். அதை அறிக்கை என நினைக்க வேண்டாம். நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டியதற்கான திட்டமாக இருக்கும். அதனை ஏப்ரல் 24-ம் தேதி வெளியிட உள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/DZNMV8TzIJQ

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment