வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர்.
குழந்தை கடத்தல் பீதியின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் அப் மூலமாக வதந்தி பரப்பியதாக செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞர் இன்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்" என பதிவிட்டுள்ளார்.
வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.
மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.
சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
— Kamal Haasan (@ikamalhaasan) 11 May 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.