Indian Surgical Strike on Pakistan: புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், "சுய மரியாதை உள்ள ஒரு நாடு என்ன செய்யுமோ, அதைத் தான் இந்தியா செய்துள்ளது. நம்முடைய படைகள் செய்த காரியத்தை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அவர்கள் தான் நமது கேடயம். தவிர, ஒரு கேடயம், பாதுகாப்பு அரணாக இருந்து எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செய்து காட்டியிருக்கிறார்கள். நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். எங்கள் வீரர்களுக்கு வீர வீணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - Surgical Strike 2.0 Live : 'நாட்டை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்' - பிரதமர் மோடி