”நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம்! வருக! புது யுகம் படைக்க”: கமல் ட்வீட்

மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும், தமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும், தமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதன் கிழமை காலையில் ராமேஸ்வரத்திலிருந்து தன் அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கும் கமல்ஹாசன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது சகோதரர் மற்றும் உறவினர்களை சந்திக்கிறார். அங்கு கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கிறார். பின்னர், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார். இதையடுத்து, கணேஷ் மகாலில் மீனவ மக்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

இதையடுத்து, மதியத்தில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதன்பின், தனது சொந்த ஊரான பரமக்குடியில், ஐந்து முனை சாலை அருகே பிற்பகல் 2.30க்கும், மானாமதுரை ஸ்ரீபிரியா திரையரங்கம் அருகே மாலை 3 மணிக்கும் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

இதையடுத்து, மதுரை யா.ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க. #maiam”, என பதிவிட்டுள்ளார்.

தன் அரசியல் பயணத்தை துவங்க உள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் பி.என்.சேஷன், ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கமல்ஹாசன் சந்தித்தார்.

×Close
×Close