/indian-express-tamil/media/media_files/2025/08/24/kamal-hassan-2025-08-24-10-21-12.jpg)
சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மக்களிடையே ஆதரவு திரட்டுவதும் இங்கு காலம்காலமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் அரசியல் நகர்வுகள், தமிழக அரசியல் களத்தில் எப்போதும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மறைமுகமாக விஜய் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒருவரையொருவர் பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது உரையில், "நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர்டு ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. உச்சத்தில் இருக்கும்போதே படைக்கலனோடு வந்துள்ளேன்" என்று அவர் பேசியிருந்தார். இந்த கருத்து, நடிகர் கமல்ஹாசனை விமர்சிக்கும் வகையில் அமைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
விஜயின் இந்த கருத்துகளுக்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் விதமாக, திமுக மாணவர் அணி நடத்திய 'எங்கள் கல்வி எங்கள் உரிமை' என்ற மாநாட்டில் பங்கேற்ற கமல்ஹாசன், "எல்லாமே எனக்குப் பொருந்தும்; எல்லா வேஷமும் போட்டு இருக்கேன்; நீ வேஷம் கட்டாத எனக்கு" என்று பேசியுள்ளார். இது, தான் பல்வேறு பாத்திரங்களில் நடித்த அனுபவத்தைக் குறிப்பதுடன், அரசியல் களத்தில் தான் புதிய வேடமிடுபவர் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தது.
மேலும் அவர் "மீன்" என்ற வார்த்தை ஏன் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பதற்கு அவர் விளக்கம் அளித்தார். "மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும்" என்று கூறினார். வில் இருந்தால் ஒரு வழி கிடைக்கும் என்றும், அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். தான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிட்டதாகவும், இதற்கு தோல் கொடுப்பதில் தனக்கு பயமில்லை என்றும், அது தன் கடமை என்றும் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.