மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடலூரில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடம் என்பது 3 கட்சிக்கும், 2 குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்டதல்ல என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு:
கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ திராவிடம் என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. தென் இந்தியாவில் மட்டும் திராவிடர்கள் வாழ்வதாக நினைக்க வேண்டாம். வட இந்தியாவிலும் திராவிடர்கள் வாழ்கிறார்கள்.கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியலில் ரௌடிகள் ஆதிக்கமே உள்ளது.
தூய்மையான அரசியலை எல்லோரும் சேர்ந்துதான் ஏற்படுத்த முடியும். திராவிடம் என்பது 3 கட்சிக்கும், 2 குடும்பத்திற்கும் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.மக்களை நான் சந்தித்து வரும் நிலையில், அவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. எங்களை (மக்கள் நீதி மய்யம்) வெளியிலிருந்து யாரும் இயக்கவில்லை. நாங்களே இயங்குகிறோம். மக்களுக்கு தற்போது உள்ள நிலைப்பாட்டில் தவறு செய்தவர்களை அடையாளம் காட்டினாலும் தெரியவில்லை, புரியவில்லை.
ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறோம். அரசியல் காரணங்களுக்காக ஏழ்மையைப் பாதுகாத்து வைத்துள்ளோம் நாம். பெரிய நிலச் சுவான்தார்களிடம் உங்களிடம் நிறைய இடம், பணம் இருக்கு. ஏன் ரோடு போடலை என்று கேட்டால்- அவர்கள் ஐயா ரோடு போட்டா பள்ளிக்கூடம் வந்திடும், பள்ளிக்கூடம் வந்தால் படித்துவிடுவான். படித்துவிட்டால் யூனியன் வந்துவிடும், யூனியன் வந்துவிட்டால் சம்பளம் கூட்டிக் கேட்பான், வேலை செய்ய மாட்டான். அதனால் சிறிய பள்ளம், மேடு இருந்தாலும் சாலை இப்படியே இருக்கட்டும் என்கிறார். இது வல்ல இந்தியக் கனவு.
பிரதமருக்கு எதிராக ‘கோ பேக்’, ‘கறுப்புக்கொடி’ பிரச்சனைகள் அனைத்தும் சாதாரண விஷயம்தான். அரசியலில் இதெல்லாம் நிகழும். தமிழகத்தில் கறுப்புக்கொடி காண்பித்தது ஏன் என்பதை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். அதை கவனிக்க வேண்டியது எனது பொறுப்பல்ல, மோடியின் பொறுப்பு” என்றும் கமல் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.