கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் கட்அவுட் இடம்பெற்றது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 25) பல்வேறு அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்க நேற்று தமிழகம் வந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் கட்அவுட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பிரம்மாண்டமான கட்அவுட் வைக்கப்பட்டது. இவர்களின் கட் அவுட் உடன் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோரின் கட்அவுட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.
கோவையில் பிரதமர் மோடி மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரின் கட்அவுட் வைத்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ஆல் காமராஜர் தாக்குதலுக்குள்ளானார் என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவினர் காமராஜரின் கட்அவுட்டை வைப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தனர். இருப்பினும், காமராஜர் மீதான தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் மறுத்தார். மேலும், அவர் ஒரு தலைவரின் கட்அவுட்டைப் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை குறிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, இரு கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு ஒரு ‘ஊழல் ஹேக்கத்தான்’ போல இருக்கும். ஏனென்றால், அவர்கள் எப்படி கொள்ளையடிப்பது என்று விவாதிக்க மட்டுமே அடிக்கடி சந்திப்பார்கள் என்று கூறினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் கோயம்புத்தூரில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நெய்வேலி புதிய அனல் மின் திட்டம் மற்றும் நான்கு தென் தமிழக மாவட்டங்களுக்கான 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், கோரம்பள்ளத்தின் எட்டு வழிச்சாலை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் ஆகிய இடங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய பவானி சாகர் அணையின் நவீனமயமாக்கல் திட்டம், சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள சரக்கு மேலாண்மை மையம், தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் பாலம் மற்றும் ரயில் பாலம், வீடற்றவர்களுக்காக திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் கட்டப்பட்ட 4,144 அரசு குடியிருப்புகளை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, என்.டி.ஏ மற்றும் அதிமுக அரசுகள் இணைந்து செயல்படுவது கூட்டாட்சி கூட்டுறவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான நல்லுறவை மேற்கோள்காட்டி பல மத்திய திட்டங்களை அளித்துள்ளதாகக் கூறினார். இந்த பொதுக்கூட்டத்திப் பேசிய பிரதமர் மோடி, “அரசியல் எதிர்ப்பு என்பது கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அவர்கள் ஒரு அராஜாக கலாச்சாரத்தை ஊக்குவிப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பாவி மக்களை தொந்தரவு செய்யும் சமூக விரோத சக்திகள் அவர்களிடம் உள்ளன. அவர்களின் கட்சித் தலைவர்கள் பணம் பறிக்கிறார்கள். அத்தகைய கலாச்சாரத்தால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தமிழக பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அம்மா ஜெயலலிதா திமுகவை எப்படி நடத்தினார் என்பது மொத்த தமிழகத்திற்கும் தெரியும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
இதனிடையே, தமிழக மூத்த தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் கூறுகையில், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் கொலை செய்ய முயற்சித்த ஒரு தலைவரின் படத்தைப் பயன்படுத்த உரிமை இல்லை என்று கூறினார். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) தலைவராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் டெல்லியில் அவரைக் கொல்ல முயன்றனர். ஏனென்றால், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப்போது அவரது படத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “அவர்கள் முதலில் சர்தார் படேலை கைப்பற்றினார்கள். என்ன நடந்தது? குஜராத் மைதானத்துக்கு அவரது பெயருக்கு பதிலாக நரேந்திர மோடி தனது பெயரை மாற்றினர்… பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் வெட்கம் இல்லை. அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று புகழ்பெற்ற தலைவர்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இது கமராஜரைக் கைப்பற்றும் முயற்சி. இது அவர்கள் இந்து நாடார் வாக்குகளை குறிவைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று ஆனந்த் சீனிவாசன் கூறினார்.
கோவை பொதுக்கூட்டத்தில் காமராஜரின் கட்அவுட் இடம்பெற்றது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறிய ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா, “இதில் என்ன தவறு? அவர் 1971-ல் ராஜாஜியுடன் ஜனசங் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தார். அவரது சொந்த அமைப்பான இந்திய தேசிய காங்கிரசுக்கு (அமைப்பு) என்ன நடந்தது? அது பின்னர் ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது. பாஜக அவருடைய படத்தை பயன்படுத்துவதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் இந்து குழுக்களால் அவரது வீடு எரிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ் அவரைக் கொல்ல முயன்றது என்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, இது 1967ல் நடந்த ஒரு சம்பவம்/ அதில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை, அதேபோல், காமராஜருக்கு எதிரான தாக்குதலிலும் ஆர்.எஸ்.எஸ். பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. 1967ம் ஆண்டில் பசு படுகொலைக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஏன் கொல்லக்கூடாது, ஏன் சாப்பிடக்கூடாது’ என்ற அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அவரைத் தாக்கவில்லை. ஆனால், அவரது கருத்துக்களால் காயமடைந்த சிலர் அதன் பின்னால் இருந்தனர்” என்று ஹெச்.ராஜா கூறினார்.
சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுகையில், “காமராஜரை தங்கள் சமூக அடையாளத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு பகுதி உள்ளனர். தமிழகத்தில் சமூக அடிப்படையிலான விரிவாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த குழுவை குறிவைப்பதைத் தவிர, பாஜக அவர்களின் கட்சி பொதுக்கூட்டத்தில் காமராஜரின் படத்தைப் பயன்படுத்த வேறு எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை. அவருடைய ஆட்சி அல்லது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேசவில்லை. இது இந்து நாடார் வாக்குகளை முன்வைத்து செய்யப்படுவது. இது நிச்சயமாக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வளர்ந்து வரும் வாக்கு வங்கியாகும்” என்று மணிவண்ணன் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக வெளியிட்ட பிரச்சாரப் பாடலில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர். அதற்கு, அதிமுக தலைவர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.