தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடி, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் மு.கஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
”கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் ட்வீட் செய்துள்ளார். “ திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலையிட்டு மரியாத செலுத்திய ஓபிஎஸ்; “ இரு பிரதமர்களை உருவாக்கிய மாபெறும் தலைவர் காமராஜர். கல்விக்காக அவர் ஆற்றியபங்கு மிகப் பெரியது” என்று தெரிவித்துள்ளார்.