தமிழகத்தின் கல்விக் கண்களைத் திறந்தவரும், தமிழக வளர்ச்சிக்கு வித்திட்டவருமான பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை காமராஜரின் தியாகங்களையும், சாதனைகளையும் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..
இந்த வரிசையில், கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரம் பள்ளி, காமராஜரின் பிறந்தநாளை ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தலைவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், மாணவர்கள் ஓர் அரிய காட்சியை அரங்கேற்றினர்.
காமராஜர் வேடமணிந்த மாணவர்கள்; தமிழ்நாடு வரைபடமான பதாகைகள்!
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/15/whatsapp-image-2025-2025-07-15-13-36-30.jpeg)
அஷ்ரம் பள்ளி மாணவர்கள், காமராஜர் கொண்டு வந்த 123 முக்கிய திட்டங்கள் குறித்த பதாகைகளைத் தங்கள் கைகளில் ஏந்தியவாறு, ஒரு தத்ரூபமான தமிழ்நாடு வரைபடமாக அணிவகுத்து நின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி, பள்ளிகள் சீரமைப்பு, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மின்சார உற்பத்தி என தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற காமராஜரின் ஒவ்வொரு முக்கிய திட்டத்தையும் ஒவ்வொரு பதாகை தெளிவாகக் காட்சிப்படுத்தியது. இந்த புதுமையான அணுகுமுறை, காமராஜரின் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு ஆழமான புரிதலையும், தேசப்பற்றையும் உணர்த்தும் விதமாக அமைந்தது.
செய்தி: பி. ரஹ்மான், கோவை மாவட்டம்