Arun Janardhanan
Kancheepuram woodcutting unit bonded labours : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பெரியகரும்பூர் என்ற கிராமம். அங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த காசி மற்றும் 20க்கும் மேற்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடிகளை சமீபத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் வேதனையை அளிக்கும் வகையில் அமைந்தது.
அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளின் காலில் விழுந்தார் 70 வயது மதிக்கத்தக்க காசி. ரூ. 20,000 கடனாய் பெற்றதிற்காக பல ஆண்டுகளாக அவர் கொத்தடிமையாக நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்ட வருவாய் துறையினர், அம்மக்களுக்கு உடுத்த உடையும், உணவிற்காக 10 கிலோ அரிசியும் கொடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அன்று இரவு, இவர்களை கொத்தடிமைகளாக நடத்தியவருக்கு தெரிந்தவர்கள் இவர்களை மிரட்டியுள்ளனர். இவர்களுக்கு இன்னமும் ரிலீஸ் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழின் படி, இவர்கள் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடன் ரத்தாகும். மேலும் மத்திய & மாநில அரசுகளின் திட்டங்களின் படி, உதவித்தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்தடிமைகளாக வேலை செய்தவர்களை விசாரிக்கும் அதிகாரிகள்
புதன் கிழமையன்று வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 42க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வருவாய் துறையினர் மீட்டனர். இவர்கள் அனைவரும் நடராஜன் மற்றும் அவருடைய மருமகன் பிரசாந்த் என்பவரின் நிலங்களில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருமே இருளர் இனத்தை சேர்ந்தவர்களே. வேலூரில் இருந்து மீட்கப்பட்ட 12 நபர்களுக்கு ரிலீஸ் சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களின் கண்ணீர் கதை
காசி இது குறித்து கூறுகையில், ‘நான் நடராஜனிடம் வேலை பார்க்கின்றேன். ரூ. 20 ஆயிரம் கடனாய் பெற்றதிற்காக 5 ஆண்டுகளாக கொத்தடிமையாக பணியாற்றுகின்றேன் என்று 70 வயது முதியவர் நொறுங்கிய இதயத்துடன் கூறுகிறார்.
அய்யப்பன் மற்றும் பொன்னியம்மாளும் கூட நடராஜனின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மரங்கள் வெட்டும் பகுதியில் இருக்கும் சிறிய குடியிருப்பில் வசிக்கும் இவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்களின் சொந்த பந்தங்களை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அய்யப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ செலவிற்காக ரூ. 10 ஆயிரத்தை கடனாக நடராஜனிடம் வாங்கியதால் இவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிந்து வந்தனர்.
புதன்கிழமை மீட்கப்பட்ட 42 நபர்களில் 10 பேர் குழந்தைகள். பெற்றவர்களின் கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் சரவணனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனாலும் பேச இயலவில்லை. தாசில்தார் ரமணி கூறுகையில் துணை ஆட்சியர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். விசாரணை முடிவுற்ற பின்னர் காசி மற்றும் இதர நபர்களுக்கும் சர்டிஃபிகேட்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : Rescued from bonded labour, Kancheepuram’s Kasi still in fear
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.