/indian-express-tamil/media/media_files/2025/02/24/VU0zqOfLfCJk7JFKMvBY.jpg)
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு திரும்பினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்டு மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம். பிரணவ் மந்திரங்களாக இருக்க கூடிய சரஸ்வதி, கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுபவர்களுக்கு உயர்ந்த புண்ணியம், சொர்க்கம் கிடைக்கிறது என்று ரிக் வேதம் சொல்கிறது.
போகி அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை நடைபெறும் கும்பமேளாவில், முக்கிய பிரமுகர்கள் முதல் பாமர மக்கள், சிறிய குழந்தைகள் என பக்தி ஸ்திரத்தையோடு, இதுவரை 62 கோடி பேர் புனித நீராடியதாகவும், ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் இந்து சமயத்தின் மேன்மைகள், தன்மைகள் ஒரு சேர பார்க்க முடிகிறது. இந்த கும்பமேளா இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாச்சார பாரம்பரியத்துக்கும், சேவை மனபான்மைக்கும் உதாரணமாக தேசிய திருவிழாவாக திகழ்கிறது.
கம்ப்யூட்டர் யுகத்திலும் மக்கள் மத்தியில் பக்திநெறி ஆழமாக வேரூன்றி இருக்கிறது, ஆன்மீகநெறிக்கும் பக்திநெறிக்கும் எடுத்துக்காட்டாக கும்பமேளா அமைந்துள்ளது. காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாட சாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்ன தானங்கள் நடக்கிறது. அங்கு நடந்த விழாவில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, தென்னாட்டுக்கும், வடநாட்டுக்கும் உள்ள பாரம்பரிய, கலாச்சாரங்கள் மற்றும் வரலாற்று தொடர்புகள் குறித்த கருத்துகள் அவரிடம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை தமிழகத்துக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்று அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்"என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.