தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத இளைய மடாதிபதி விஜயேந்தரர்! மதுரை ஆதீனம் எதிர்ப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான எஸ்.ஹரிஹரன் எழுதிய, தமிழ் – சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர், பேராசியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்தரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இதனால், தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்தரர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் விஜயேந்தரரின் இந்த செயலுக்கு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து அவமரியாதையாக பேசியதாக வைரமுத்துவை மன்னிப்புக் கேட்கச் சொல்லும், ஹெச்,ராஜா, விஜயேந்தரரை தற்போது மன்னிப்பு கேட்கச் சொல்வாரா? என ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, #VijayendraAskSorry  என்ற ஹேஷ்டேகும் உருவாக்கப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில், மதுரை ஆதீனம் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், “தமிழக மக்களின் பெருமைகளை சொல்லக் கூடிய ஒரு மாண்புமிக்க நிலைப்பாடு தமிழ்த் தாய் வாழ்த்து. அந்த தமிழ்த் தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதையை அளித்திருக்க வேண்டியது விஜயேந்தரரின் கடமை, பொறுப்பு. இந்த சம்பவம் அவருக்கு சிறுமை சேர்த்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close