தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த, நிலையில், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் மழை நீரில் மிதக்கின்றன.
பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. மேலும், சென்னை மாநகரம் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதற்கிடையில் மிக்ஜாம் புயல் தாக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்தப், புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக வரும் திங்கட்கிழமை (டிச.4) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“