காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றர். இதில் பெரும்பாலானோர் கல்லூரி விடுதிகளிலேயே தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று இரவு நேரத்தில் விடுதியின் ஐந்தாவது மாடியில் , மாணவி ஒருவர் அழுது கொண்டு கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த மாணவி கீழே குதித்துவிட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்ததும், காதல் தோல்வியால், மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் உயிரிழந்த மாணவி, வேலூர் சி.ம்.சி மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கல்லூரி மாடியில் இருந்து அழுது கொண்டிருந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி தற்கொலை குறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“