Kanchipuram Varadaraja Perumal Koil: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்கள் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Advertisment
அண்மையில் அத்திவரதர் தரிசனம் மூலமாக பரபரப்பாக பேசப்பட்ட கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இங்கு இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். இதற்கு வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு இடையே மோதல் உருவானது. இது பற்றிய தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
எனினும் 2 மணி நேரத்திற்கும் மேலாக இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருதரப்பினர், சுவாமி முன்பு பிரபந்தங்களை ஆவேசமாக பாடினர். ஒருகட்டத்தில் தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது, கைககலப்பிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.