/indian-express-tamil/media/media_files/2025/10/26/thiruchendur-thirukalyanam-preparations-2025-10-26-11-11-16.jpg)
கந்த சஷ்டி திருவிழா: சூரசம்ஹாரம் ஏற்பாடுகள்; திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி திருவிழா மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்த சஷ்டித் திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்த திருக்கல்யாணம் அக்.28 அன்றும் நடைபெறவுள்ளது. இந்த முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும் கடற்கரைப் பகுதி, கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் மற்றும் பக்தர்களின் தங்குமிடங்கள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்வையிட்டார்.
பார்வைக்குப்பின், கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டபடி முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us