Director Velu Prabhakaran arrested : மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைத்திருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்து மதம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
நாளைய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை உட்பட சில படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். சில படங்களில் நடித்தும் உள்ளார். தனது 60 வயதில் தன் படத்தில் நடித்த செர்லின் தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.
கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவரான வேலு பிரபாகரன் தனது படங்களிலும் அந்த கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பரபரப்புக் கிளம்பியது. இது பற்றி சமூக வலைதளங்களில் வாக்குவாதம் நடந்தது. பின்னர் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்து மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தும், இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் பேட்டி அளித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில், “யூ டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.
மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைத்திருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மதுரவாயலில் வைத்து இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil