"எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்"! - அஸ்வினி மரணம் குறித்து கனிமொழி

பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்த நிலையில், நேற்று கல்லூரி முடித்து வெளியே வந்த போது, அழகேசன் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதன்பின் போலீசார் அழகேசனிடம் நடத்திய விசாரணையில், இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அழகேசன் மீது அஸ்வினி காவல் நிலையத்தில் அளித்த புகார் கடிதத்திலும், தான் அழகேசனை காதலித்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். அதன்பின், சில காரணங்களால் அஸ்வினி அழகேசனை விட்டு பிரிந்து இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாகவே, அஸ்வினி நேற்று கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அழகேசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறு செய்யப்பட்ட அஸ்வினி உடல், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது, பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என திமுக எம்.பி. கனிமொழி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர், “சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை.

வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள்,ஆட்சியாளர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close