திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் திமுக பாக முகவர்கள் கூட்டம், செங்குளம் ஊராட்சியில் உள்ள அழகு மஹாலில் நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகம்பெல் தலைமையில் நடைபெற்றது.
இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம் பி கலந்துகொண்டு, ஓரணியில் தமிழ்நாடு மற்றும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் 2026 பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசியதாவது:- திமுக பல போராட்டங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் இருக்கக்கூடியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இயக்கத்தின் தலைவர்களை கொண்டிருக்க கூடிய இயக்கமாக, பாஜகவின் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய முதலமைச்சரைத் தலைவராக கொண்டுள்ள இயக்கத்தை நாம் பெற்று இருக்கிறோம்.
இந்த நாடே நம்மைப் பார்த்துப் பிரமிக்க கூடிய ஒரு போர் குணத்தோடு திமுக இருந்து கொண்டிருக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொழி சார்ந்த பிரச்சனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமைகளை எல்லாம் ஒன்றிய அரசு மறைத்து, மறுதலிக்கத் துணிந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கை என்பதைக் கொண்டு வந்து அடக்கிட நினைக்கிறது.
ஹிந்தியை கொண்டு வந்து கல்வித்திட்டத்தில் திணித்து, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் ஒன்றிய அரசு இருந்து வருகிறது.
தமிழ்நாடு வளரும் மாநிலமாக மாறிவிடக்கூடாது, அதனை முடக்க வேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், அத்தனை சவாலையும் தாண்டி ஒரு சிறப்பான ஆட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்து வருகிறார்.
அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் என்ன, ஆட்சி அதிகாரம் என்றால் என்ன என்று தெரியாமல் புதிதாக வந்து எதை வேண்டுமானாலும் பேசி வருபவர்களால் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்யமுடியாது.
அதே நேரத்தில் யார் தமிழ்நாட்டைத் தமிழ் மக்களை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக போன்ற கட்சிகளை நிச்சயமாக அவர்களுடைய துரோகத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்பதைப் பயன்படுத்திட வேண்டும்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் கட்டாயம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலையும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்களை பாஜக ஏற்படுத்திப் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. டெல்லியில் முதலமைச்சர் போட்டியிடும் தொகுதியில் இதனைச் செய்தார்கள். பீகாரில் தற்போது இந்த குளறுபடியை பாஜக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களை சரி பார்க்க வேண்டியது, வரும் தேர்தலில் கட்டாயமாக நேர்மையாக நடத்தப்பட வேண்டும் நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.
அவர்கள் நியாயமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். பின்னர், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுக நிர்வாகிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்