kanyakumari-district | mp-kanimozhi | கன்னியாகுமரியில் உலக மீனவர் தினவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கனிமொழி, “மத்திய அரசு சாதி மதத்தின் பெயரால் காழ்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, மீனவர் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் இணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், “இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கிறது.
நம் மூதாதையர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தார்கள், கடலில் எல்லை இல்லை என்ற அளவில் முன்னோர்கள் மீன் பிடித்தார்கள். ஆனால், இப்போது கடலில் பிரிவினை ஏற்படுத்தி வருகின்றனர்.
மீனவர்கள் பாதிக்கப்படும் பிரச்னையை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. மக்களை பிரித்தாளுவது, சாதி, மதத்தின் பெயரால் பிரச்னைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் பிரிவினை ஏற்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
பிரிவினையால் பிரச்னைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மத்தியில் இருப்பவர்கள் நம்மை பிரித்தாளுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தகவலை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
நாம் ஒன்றுப்பட்ட மனிதர்களாக வாழும் சூழ்நிலையை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்கும்போது, நம்மை பற்றி கவலைப்படும் அரசு இருக்கும்போது கோரிக்கைகள் நிறைவேறும்.
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்வதற்கான நடவடிக்கையை முதல்வர் நிறைவேற்றி தருவார். மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையில் வைத்துள்ளார்.
சட்டசபையில் மசோதா நிறைவேற்றினால் அதை நிறுத்திவைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என உச்சதீநிமன்றம் கூறி உள்ளது.
உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் மீனவர்கள் வீடு கட்டினால் பட்டா வழங்கப்படவில்லை.
இப்போது மீனவர்களுக்கு உரிமையான இடங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. உங்களுக்கு பட்டா இல்லை என்றால் மனு கொடுங்கள் நாங்கள் பட்டா வாங்கித்தருகிறோம்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.