"அன்பு உள்ளங்கள்" என்ற பெயரில் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி ஊராட்சியில் உள்ள அன்னை தெரசா நகரில் அமைத்துள்ளது. முதியோர் இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று (28/12/2024) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு முதியோர் இல்ல புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இந்த விழா முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., பேசியதாவது;
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அவர் மீது ஒரு குற்றச்செயல் நடந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் எஃப்.ஐ.ஆர்-யை மறைத்துள்ளனர். பாலியல் தொல்லை தந்ததோடு மட்டுமில்லாமல் சங்கிலியையும் அந்த குற்றவாளி பறித்துள்ளார். ஆனால், அதைச் சங்கிலி பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை விதித்திருந்தால், ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அப்போது, அவர்கள் கடமையை செய்யத் தவறியதால் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க இன்று காரணமாகிவிட்டது.
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாகப் படிக்க வரக்கூடிய தமிழகத்தில் எல்லோ பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்துச் சொல்லும் போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முதல்வரும், தி.மு.க-வும் பெண்களின் உரிமைக்காகவும் பெண்களின் கல்விக்காகவும், உரிமையை இன்னும் அதிகப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது. பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது. அதனால் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார்.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.