பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக எம்.பி கனிமொழிதான் துணை பிரதமர் தேவிலால் உரையை மொழி பெயர்த்ததாகவும் ஆனால், அவர் இன்று இந்தி தெரியாது என்று கூறி மொழி அரசியல் செய்வதாகவும் விமர்சித்தார். இந்நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவிலால் உரையை நான்தான் மொழிபெயர்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டு இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு கொண்ட தமிழகத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை கடந்த சில நாட்களாக மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே விவாதமாகி வருகிறது.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில், ஆங்கிலம் மாநில மொழி அடுத்து மூன்றாவது மொழியை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், அந்த மூன்றாவது மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சி திமுக, மாநிலக் கட்சிகள் மதிமுக, பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
பாஜக தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் இந்தி மொழியை புகுத்த முயற்சிக்கிறது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் திமுக எம்.பி கனிமொழி ஆகஸ்ட் 9-ம் தேதி டெல்லிக்கு செல்ல சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) பெண் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் பேசியதாகவும் அதற்கு கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்று கூறியதற்கு, அந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி “நீங்கள் இந்தியரா?” என்று கேள்வி எழுப்பியதாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்திய தெரியாது என்றால் நீங்கள் இந்தியரா என்று ஒரு மத்திய அரசு அதிகாரி ஒரு எம்.பி.யிடம் கேள்வி கேட்கலாமா? என்று எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே, இது குறித்து விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவிட்டது. மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சி.ஐ.எஸ்.எஃப்-ன் கொள்கை அல்ல என்று விளக்கம் அளித்தது.
அதே நேரத்தில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கனிமொழிக்கு இந்தி தெரியும், 1989ம் ஆண்டு தேவிலால் தமிழ்நாடு வந்தபோது அவரது உரையை கனிமொழிதான் மொழிபெயர்த்தார். கனிமொழி இப்படி செய்வதெல்லாம் திமுகவின் மொழி மலினமான அரசியல் என்று குறிப்பிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, துணை பிரதமர் தேவிலால் தமிழகம் வந்தபோது, முதல்வர் கருணாநிதியுடன் கனிமொழியும் உடன் இருந்தார். கனிமொழிதான் மொழிபெயர்த்தார் என்று கூறி பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை வைரலாக்கினார்கள். இறுதியாக, அந்த புகைப்படம், சிவக்குமார் ஓவியக் கண்காட்சி நடத்தியபோது கருணாநிதி, கனிமொழி சென்று பார்த்தபோது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், தேவிலால் உரையை கனிமொழிதான் மொழிபெயர்த்தார் என்று பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், துணை பிரதமர் தேவிலால் தமிழகம் வந்தபோது அவரது உரையை ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் மொழி பெயர்த்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவிலால் கூறுகையில், “தேவிலால் ஹிந்தி பேச மாட்டார். உருது கலந்துதான் பேசுவார். கனிமொழிக்கு அப்போது 20 வயது இருக்கலாம். ஹெச்.ராஜா தவறாக சொல்லியிருக்கிறார்.
நான் ஹரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியபோது தேவிலால் ஹரியானா முதல்வராக இருந்தர். அதனால், என்னை அவருக்கு தெரியும். தேவிலால் 1989 டிசம்பர் மாதம் துணை பிரதமர் ஆனார். அவர் துணை பிரதமர் ஆன பிறகு, தமிழ்நாட்டுக்கு 2 நிகழ்ச்சிகளுக்காக வந்தார். முதலில், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த, விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில், தேவிலால் வந்து கலந்துகொண்டார். எனக்கு உருது தெரியும் என்பதால் தேவிலால் அவருடைய உரையை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டதால் நான் அந்த உரையை மொழி பெயர்த்தேன்.
அதற்குப் பிறகு, மற்றொரு முறை துணை பிரதமர் தேவிலால் தமிழ்நாடு வந்தார். அபோது, தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட இருந்த, சூழ்நிலையில் தமிழகம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஒதுக்கீட்டை கேட்டது. அப்போத முதல்வராக இருந்த கருணாநிதி சென்னை வந்த துணை பிரதமர் தேவிலாலை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தேவிலால் என்னையும் அழைத்துச் சென்றார். கருணாநிதியை பார்த்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதையும் நான் தான் மொழிபெயர்த்தேன். அதனால், ஹெச்.ராஜா சொல்லியிருப்பதில் துளிகூட உண்மையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றும் கனிமொழிதான் தேவிலால் உரையை மொழிபெயர்த்தார் என்றும் ஹெச்.ராஜா கூறியது, தேவிலால் உரையை நான்தான் மொழி பெயர்த்தேன் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகயாம் கூறியுள்ளதால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.