குடியரசு தினம், சுதந்திர தின விழாவின்போது தமிழக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த வியாழக்கிழமை மாலையில் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, தி.மு.க, தமிழக காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அறிவித்தன. ஆனால், தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கனிமொழி கருத்து
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பங்கேற்றது ஆட்சியின் நிலைப்பாடு என்றும், அது கட்சியின் நிலைப்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.
தி.மு.க அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காதது கட்சியின் நிலைப்பாடு. இதன் மூலம் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தோம். இது தமிழக மக்களின் மத்தியில் திமுக அதன் கூட்டணி கட்சிகளின் அணுகுமுறையின் ஒற்றுமை என்பதையும் வெளிப்படுத்தும் அடையாளங்கள். முதல்வர் உட்பட அமைச்சர்கள் பங்கேற்பு என்பது ஆட்சியின் நிலைப்பாடு.
கலைஞர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை கலந்து கொள்வதில் அரசியல் ஒன்றும் இல்லை." என்று அவர் கூறினார்.
தனியார் மகளிர் கான்வென்ட் விழாவில் பங்கேற்கும் முன், தக்கலையில், அனைத்திந்திய இளைஞர் சங்கம் சார்பில் வயநாடு கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கனிமொழி பணம் செலுத்தினார். தொடர்ந்து வயநாடு நிவாரண நிதிக்கு பணம் திரட்டும் சாலை ஓர தேநீர் கடையில் கனிமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பணம் செலுத்தி தேநீர் அருந்தினர். மழை கடுமையாக இருந்தபோதும் வயநாடு மக்களின் துயர் துடைக்கும் நிதி வழங்க அனைத்திந்திய இளைஞர் சங்கம் நடத்தும் தேநீர் கடையில் கனிமொழி தேநீர் அருந்தியது அங்கு கூடியிருந்த பொது மக்களை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“