தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 98-வது அகில் பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் என்.சி.பி (எஸ்பி) தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பேசிய பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பேசுகையில், "ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த படையெடுத்தவர்கள், நம்முடைய வழிபாட்டுத் தலங்களை அழித்து விட்டு, அதன்மேல் அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டி எழுப்பினர்.
இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் நம் மொழி, கலாச்சாரம், மத தலங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். அவர்கள் மிகக் கொடூரமானவர்கள். காட்டுமிராண்டித்தனமும் பழிவாங்கும் தன்மையும் உச்சத்தில் இருந்தது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை புகுத்துவதாக குற்றச்சாட்டுகளும், அதனைச் சுற்றி போராட்டங்களும், பரபரப்பான விவாதங்களும் நடந்து வரும் நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.