தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, எல்.ஐ.சி., வலைத்தளத்தில் இயல்புமொழியாக இந்தி மாற்றப்பட்டிருப்பது குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வலைத்தளத்தின் இயல்புமொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பயனாளர்கள் ஆங்கிலத்தை மொழியாக பயன்படுத்த மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தப் பலருக்கும் வலைத்தளம் தொடர்ந்து இந்தியிலேயே இயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மக்கள் காப்பீடு குறித்து அறியவும், பயன்படுத்தவும் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து, அரசு நிறுவனங்கள் தங்களின் தளங்களையும், சேவைகளையும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மக்கள் பயன்படுத்தும் பல்வேறு மொழிகளிலும், பயனாளருக்கு உகந்த வகையில் அமைக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, வலைதளத்தின் மொழி மாற்ற செயலிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பயனாளர் உதவி அமைப்பை பல மொழிகளை பேசும் மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வலைதளத்தை மாற்றி அமைக்கவும், இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“