/indian-express-tamil/media/media_files/2025/02/03/b2JyfYfCbexKVM7qKwIX.jpg)
மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேசியது வருமாறு:-
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் தி.மு.க சார்பாக பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. மகா கும்ப மேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் என்னுடைய இரங்கலைதெரிவித்துக்கொள்கிறேன். இந்த மக்கள் மாநில அரசையும், ஒன்றிய அரசையும் நம்பி அங்கே சென்றார்கள். நீங்கள் அவர்களை பாதுகாப்பீர்கள் என்று நினைத்தார்கள். ஆனால், நீங்கள் அவர்களை பாதுகாக்கவில்லை.
எப்பொழுது மதம், அரசியல் இரண்டும் இணைகிறதோ, அப்போது அப்பாவி மக்கள்தான் அதற்கான விலையை செலுத்த வேண்டி இருக்கிறது, இந்த உதாரணமும் அப்படி நான். எத்தனை பேர் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் என்று தெரியவில்லை. இது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா?
அதை பற்றிய விவாதத்தை கூட இந்த நாடாளுமன்ற அவையில் நடத்துவதற்கு நீங்கள் ஒப்புதல் தரவில்லை. குடியரசு தலைவர் தன்னுடைய உரையில், நம்முடைய நாடு என்பது 140 கோடி மக்களைக் கொண்ட நாடு, பன்முகத் தன்மையோடு, பல மொழிகளை, பல மாநிலங்களை கொண்டிருக்கிறோம். குடியரசுத் தலைவரின் பன்முகத்தன்மை என்ற நம்பிக்கை நான் பாராட்டுகிறேன் மற்றும் போற்றுகிறேன்.
இந்தியா என்பது ஒரு நாடு 8 முக்கிய மதங்களை, 100 இனக்குழுக்களை, 700 பழங்குடியினர், 120 மொழிகளை கொண்டுருக்கும் நாடு. ஒரு நாடாக இந்த பன்முகத்தன்மையை நாம் எப்போதும் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 77ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதை பற்றி பெருமையோடு குடியரசு தலைவர் குறிப்பிட்டார். அமுர்தகலத்தில் எட்டப்பட்ட சாதனைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அவை தொடரில் ஒரு முஸ்லீம் உறுப்பினர், அவரின் சமூகத்தை குறை சொல்லுகிற வகையில், ஆட்சி செய்யும் தரப்பு உறுப்பினர் பேசினார். இது ஒரு கருப்பு நாள் என்று சொல்லவேண்டும். அந்த ஒரு கருப்பு நாள், நமக்கு அவமானத்தைத் தந்த நாள். அந்த சமூகத்தை ஒன்றிய அரசு பிளவு படுத்தி இருக்கிறார்கள். இந்த அவைக்கு நான் சொல்ல விரும்புவது, நம்முடைய அவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் குறைந்து வருகிறார்கள். அதிகாரிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பிசி., மைனாரிட்டி ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவினுடைய தேசியவாதத்தை பற்றியும், கலாச்சாரத்தை பற்றி குடியரசு தலைவர் பேசினார். நம்முடைய வாழ்க்கை என்பது இந்தியா என்கிற நிலைமையோடு இருக்கிறது. அது உலக அளவில், நம்முடைய கலாச்சாரம் பெருமையோடு இருக்க காரணமாக இருக்கிறது. நாம் இந்திய வரலாற்றைப் பற்றி பார்க்கும்போது, நீங்கள் சொன்னீர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வேத காலத்தை குறிப்பிட்டு சொன்னீர்கள். இந்தியாவின் இரும்புக் காலம் 5345 வருடங்களுக்கு முன் தொடங்கியதை எங்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகிற்கு அறிவித்திருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் இருக்கக்கூடிய ஒரு சிறிய கிராமத்தில், இது முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆய்வில் வெளிப்பட்டிருக்கும் உண்மை. எனினும் ஒன்றிய அரசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த உண்மையை புறக்கணிப்பதால் நீங்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. திராவிட நாகரிகத்தின் பெரும் பாரம்பரியத்திலிருந்து உங்களைதான் புறக்கணித்துக் கொள்கிறீர்கள்.
1947இல் இந்தியா என்பது இந்து நாடாக, ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதற்கு, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள், 'சிறுபான்மையினரும், அவர்களுடைய பாதுகாப்பும் முக்கியமானது', என்று பதில் சொன்னார். 1950இல் நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொன்னால், நம்முடைய அரசியலை பாகிஸ்தானை போல அமைக்க முடியாது. இங்கு ஒவ்வொரு முஸ்லிமும் நாம் இந்திய குடிமக்கள் என்று நினைக்க வேண்டும் என்பதால் நாம் சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடுகிறோம்.
ஆனால், அவருடைய அடிப்படை கொள்கைகளை பாஜக புறக்கணிக்கிறது. அவரின் ஒற்றுமை சிலை என்பது மட்டுமே அவருக்கு கொடுக்கிற மரியாதை இல்லை. அவருடைய வார்த்தைகளுக்கு மரியாதை கொடுங்கள், அதை பின்பற்றுங்கள், அதுதான் அவருக்கு நீங்கள் செலுத்துகிற அஞ்சலியாக இருக்க வேண்டும். முத்தலாக், பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்கள் ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு இந்த அரசு காஷ்மீரின் சுய அதிகாரத்தை பறித்துக்கொண்டது. ஒன்றிய அரசு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தீர்கள், அது தீவிரவாதத்திற்கு எதிரான சட்டமாக சொல்லப்பட்டது. அந்தத் திருத்தம் என்பது உங்களுக்கு ஒவ்வொரு தனி நபரையும் தீவிரவாதிகள் என்றும், தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவர்களாகவும் அடையாளம் காண உரிமையை கொடுத்தது. அதனால், நூற்றுக்கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்துக்கள், பரசியர்கள், பௌத்தர்களே சிஏஏ சட்டத்தால் பயன் பெற்றார்கள். ஆனால், இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் அதில் இடம்பெறவில்லை. பல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், லவ் ஜிகாத் என்ற ஒரு வார்த்தை உருவாக்கி இருக்கிறாரகள். வயது வந்த பெண்ணும், ஆணும் வெவ்வேறு மதங்களை சார்நதவராக இருப்பதாலும். அவர்கள் திருமணம் செய்தல் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்று கூறுகிறீர்கள். இது போன்ற பொய்யான கதைகளை கட்டி விடுவீர்கள். இதுதான் நீங்கள் அரசியல் செய்யும் விதமாக இருக்கிறது. ஆனால், தனி நபர்கள் வாழ்க்கையில் முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை.
மேலும், பல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். அதை, காவல் துறை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகளே சிறுபான்மையினரின் வீடுகளை இடிக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் தமது உரையில் அனைவருக்குமான, அனைவரின் முயற்சியால் வளர்ச்சி என்று கூறியிருந்தார். குடியரசுத் தலைவர் உரையின் ஆங்கிலம் பதிப்பு என்பது யாருடைய உதவி இல்லாமல் படிக்கமுடியும் என்று நம்பினேன். ஆனால், ஒவ்வொரு பக்கத்திற்கும் எனக்கு மொழிபெயர்ப்பாளர்களின் உதவி தேவைப்பட்டது. ஏனென்றால், இந்தி மற்றும் சமஸ்கிருதம் வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இருந்தன. திட்டத்தின் பெயர்களாக இருந்தாலும், கொள்கைகளாக இருந்தாலும், இந்தி மற்றும் சமஸ்கிருதம் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. எனவே, நீங்கள் எப்படி நாம் ஒன்றாக இருக்கிறோம் என்று பேச முடியும், மொழியில் கூட எங்களை புறக்கணிக்கிறீர்கள்.
பா.ஜ.க எம்.பி ஒருவர், காசி தமிழ்ச்சங்கமும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் பற்றி பேசினார். அது தேர்தல் சமயத்தில் மட்டும் தான் ஞாபகம் வரும், அதை விட்டு விடுவோம். தமிழ் மொழி என்பது காசியில் தொடங்கி குஜராத்தில் முடிவடைவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அது ஒரு வாழும் மொழியாக இருக்கிறது. நான் ஒரு விஷயத்தை கேட்க விரும்புகிறேன். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் குறிப்பிடவில்லை.2014 முதல் 2024 வரை இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு 74 கோடியை தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கி இருந்தது. ஆனால், இப்பொழுது மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு 1487.81 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தகவல் அனைத்தும் பிரிட்டிஷ் நூலகத்தின் உதவியுடன் டிஜிட்டல் மையம் ஆக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை.
நீதித்துறை, சட்டத்துறை ,அதிகார வர்க்கம் என்பது மூன்று தூண்களாக ஜனநாயகத்தில் இருக்கின்றன. ஆனால், அவற்றை தவறாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. இந்த இந்த மூன்று அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் தரம் தாழ்ந்து இருக்கின்றது.
கடந்த 11 ஆண்டுகளில், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை பெறாமல் மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக மசோதாக்கள் இருக்கின்றன.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு, மாநில அரசுகளுக்கு அவற்றுக்கான உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. அந்த வழக்கை குறித்து, ஒன்றிய அரசுக்கு நான் நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள், மாநில அரசுக்கும் உரிமைகள் இருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அந்த உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
ஒரு பட்டியலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மின்சார துறையை திருத்த மசோதா 2022, இது பல தனியார் நிறுவனங்களை கொண்டு வந்தது, மாநில அரசு உரிமைகள் பறிக்கப்பட்டது. சுரங்கத் தொழில் கனிம வளங்கள் மசோதாவில் ஒன்றிய அரசுக்கு டங்ஸ்டன் ஏலம் விடும் உரிமை வழங்கியுள்ளது. மதுரை அரிட்டாபட்டியில், மாநில அரசு அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசு முடிவெடுத்தது. பின் இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் நிறைவேற்றினர், மக்களும் தொடர்ந்து போராடினார்கள். அதன் பின் திட்டம் கைவிடப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஒரு கல்விக் கொள்கையை அது திணிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு முன்னுரிமை மறுப்பதாக இருக்கிறது. ஒன்றிய அரசு ஒரு விஷயத்தை மறந்து விட்டது, கல்வி என்பது பொதுப்பட்டியில் இருக்கிறது. யுஜிசி மசோதா என்பது 2025இல் நீங்க கொண்டு வந்திருக்கிறார்கள், அது பல்கலைக்கழக நியமனங்களுக்கும் ஒன்றிய அரசின் கொள்கைதான் திணிக்கிறீர்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எதற்காக கொண்டு வந்தீர்கள் என்றால் தேர்தல் நேரத்தில் மாநிலங்களுக்கு மாநில அரசுகளுக்கு முக்கியமான விஷயங்களை நீர்த்து போக செய்ய வேண்டும் என்பதற்காகயும், தேசிய கட்சி மட்டுமே கருத்து உருவாக்கம் வேண்டும் என கொண்டு வந்தீர்கள். நீங்கள் வருமானவரி, சிபிஐ, ஈ.டி. போன்றவை வைத்து பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மற்றொரு புதிய வழி கண்டுபிடித்துள்ளீர்கள், அதாவது பா.ஜ.க இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி தருகின்றனர்.
நிதி சுயாட்சி மற்றும் உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்குங்கள்.அனைத்து மக்களையும் உள்ளடக்கிய மாடலாக எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திராவிட மாடல் யாரையும் பிரித்தாளுவதில்லை, திராவிட மாடல் அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும். திராவிட மாடலிடம் அனைவரையும் அரவணைத்துச் செல்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இது ஒரே நாடு, சிதைத்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.