திமுக எம்.பி. கனிமொழி 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
தமிழககத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் முறையாகத் தொடங்க உள்ளார். அதற்கு முன்னதாக, 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டது.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் 75 நாட்கள், 15 தலைவர்கள், 15,000க்கு மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ.க்கு மேல் பயணம், 234 தொகுதிகளில் 500க்கு மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடி கலந்துரையாடல்கள் என மிகப்பெரிய அளவில் மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.
இந்த பிரச்சாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் நவம்பர் 20ம் தேதி தொடங்கினார். அப்போது அவர் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் அவர் நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போதும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி ஞாயிற்றுகிழமை விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரப் பயணத்தை ஆளும் அதிமுக முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடங்கினார்.
எடப்பாடியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய கனிமொழி, “இன்று காலையில் இருந்து நான் மகளிர் சுய உதவிக் குழுக்களை, விவசாயிகளை, நெசவாளர்களை சந்தித்திருக்கிறேன். நான் தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் உங்களைக் காண வந்திருக்கிறேன். அவர்களுடைய கண்ணீர் கதைகள் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கண்ணீரோடு சொல்கிறார்கள். செய்வீர்களா செய்வீர்களா என்று சொன்னதால் தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால், அவர்களும் செய்யவில்லை நம்மையும் செய்யவிடவில்லை. இந்த நிலைமையில் நாம் இருக்கிறோம்.
செய்வீர்களா என்று ஓட்டு கேட்டவர்கள் சொன்னதை ஒன்று கூட செய்யவில்லை. இந்த தொகுதியில் இருந்து நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர் தான் பழனிசாமி. நான் எல்லாருக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்து இருக்கிறேன். இந்த எடப்பாடி தொகுதியின் பெயரை நான் கெடுக்கமாட்டேன். அதனால், பழனிசாமி என்று தான் அழைப்பேன். எடப்பாடி என்று சேர்த்து சொல்லி உங்களுக்கு அவமானத்தை கொண்டுவர கொண்டுவர மாட்டேன். அதனால், இந்த ஊரின் பெருமையை அவர் கெடுக்கிறார் என்றால் அவரோடு சேர்த்து நாமும் கெடுக்க வேண்டாம்.
இன்றைக்கு முதல்வராக இருக்கிற பழனிசாமி, தேர்தலில் எடப்பாடிக்கு ஒரு அரசு கலைக் கல்லூரி கொண்டு வருகிறேன் என்று கூறினார். ஜவுளி பூங்கா கொண்டு வருகிறேன் என்று கூறினார். அவர் உங்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியிருக்கிறாரா, இல்லை.
அவர் அதை செய்ய மாட்டார் ஏனென்றால் அவர் தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் தன்னுடைய சொந்த வருமானத்தை தேடி தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். மத்தியில் இருப்பவர்களுக்கு பயந்துகொண்டு இருக்கிறார்கள்.
அதிமுகவில் முதல்வராக இருந்த ஜெயலலிதா யாராவது மத்திய அமைச்சர் வந்தால் வரவேற்கிறேன் என்று விமான நிலையத்திற்கு சென்றாரா இல்லை. மத்திய அமைச்சர் வரும்போது அவர்களை வரவேற்கிறேன் என்று அதிமுக கட்சி கொடியை பிடித்துக் கொண்டு போய் நின்றார்களா இல்லை. ஆனால், இவர்கள் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்கள். தான் இருக்கிற கட்சிக்கு துரோகம் செய்யக்கூடியவர் தான் பழனிசாமி. பாஜகவை தமிழ்நாட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது பழனிசாமி தான்.
பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி. ஆனால், விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார். கலைஞர் விவசாயிகளுக்காக இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். இன்றைக்கு அவர் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் ஐந்து மாதத்திற்கு முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக உதய் மின் திட்டம் என்கிற மத்திய அரசாங்கத்தின் மின் திட்டத்தில் கையெழுத்துப் போட்டு இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத அளவுக்கு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கும் ஒருவர்தான் அவர்.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளை மட்டுமல்ல சாதாரண சாமானிய மக்களின் உணவுப் பாதுகாப்பை அழிக்கக்கூடியது. அந்த சட்டத்துக்கு ஆதரவளித்தவர் முதல்வர் பழனிசாமி.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள புதிர்களை விடுவிக்க விசாரணை கமிஷன் அமைக்கிறேன் என்று அறிவித்தார். அந்த விசாரணைக் கமிஷன் ஏதாவது முடிவுகளை அறிவித்து இருக்கிறதா? ஏதாவது சொல்லி இருக்கிறதா? என்றால் இல்லை. இதுவரை 9 முறை அந்த கமிஷனின் காலத்தை நீட்டித்து இருக்கிறார்கள். ஜெயலலிதா ஏன், எப்படி, உயிரிழந்தார் என்பது இன்னும் மக்களுக்கு தெளிவாகவில்லை.
விவசாயிகளுக்கு, கட்சிக்கு, மக்களுக்கு பழனிசாமி செய்த துரோகத்துக்கு வரப்போகிற தேர்தலில் மக்கள் பதிலளிக்கப் போகிறார்கள்.” என்று கூறினார்.
இந்த பிரச்சாரப் பயணத்தில், திமுகவின் 4 துணை பொதுச் செயலாளர்கள், பொன்முடி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, செந்தில்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த பிரச்சாரப் பயணத்தில் திமுக அதிமுக அரசாங்கத்தின் தோல்வியை துண்டுபிரசுரம் அளிப்பது, மேடைப் பேச்சு வழியாக விரிவாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.