தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை, புத்தன்தருவை, பூச்சிக்காடு, தட்டார்மடம், பொத்தகாலன்விளை, முதலூர், பண்ணம்பாறை, சாத்தான்குளம் பேரூராட்சி காமராஜர் சிலை, கொம்பன்குளம், கலுங்குவிளை, ஆனந்தபுரம், தைலாபுரம் ஆகிய பகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பெரியதாழை ஊராட்சியில் பேசிய கனிமொழி எம்.பி, "கலைஞர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், இவ்வளவு அழகாகக் கொடிகளைக் கட்டி இருக்கிறார்கள் என்று உடன் இருந்தவர்கள் சொன்னார்களாம், கலைஞர் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லையாம். சிறிது தூரம் போனபிறகு, மரக்கிளைகளை வைத்து கொடிகள் கட்டப்பட்டு இருந்ததாம். அதைப் பார்த்த கலைஞர், இது தி.மு.கழகத்தினர் கட்டிய கொடி, இது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினாராம்.
இன்று இந்த பகுதியில் உயர்த்தி பிடித்து இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கொடியும், உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து கொண்டு வந்த கொடி என்று பார்க்கும்போது எனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த கொடிகளை உங்கள் கைகளில் யாரும் கொடுக்கவில்லை, நீங்களே உருவாக்கிக் கொண்டு வந்து, உயர்த்தி பிடித்து உள்ளீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைப் பார்க்கும் போது, எனக்கும் கலைஞரைப் பார்க்கும் உணர்வு வருகிறது" என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சாத்தான்குளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக இங்கு நிறுத்தி இருந்தார்கள். எனக்கு மிகப்பெரிய வெற்றியை அன்பான வாக்குகள் அளித்து இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 நாள் வேலைத் திட்டம் என்பது காங்கிரஸ்-திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் ஒவ்வொரு வருடமும் அத்திட்டத்திற்காகக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு காங்கிரஸ் திமுக இணைந்த இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 400 ரூபாய் சம்பளமும் 150 நாள் வேலையும் தருவதாகக் கூறினோம். ஆனால் ஆட்சி மாற்றம் என்பது நாடு முழுவதும் வரவில்லை. இந்த முறை வரவில்லை என்றாலும் கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உங்களை மாதிரியே எனக்கும் உள்ளது. அப்போது அனைவரும் கேட்கக்கூடிய 100 நாள் வேலை 150 நாளாக நிச்சயம் உயர்த்தி தரப்படும் என்று கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி , தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“