இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச தயார் என தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை ஒன்றிய அரசிடம் எழுப்பவில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தவறானது. இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை நான் டிசம்பர் 2009 இல் மாநிலங்களவையில் எழுப்பினேன், சட்டரீதியான விளக்கம் மற்றும் குடியுரிமை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளின் பாராளுமன்ற பதிவுகள் இதற்குச் சாட்சியமாக உள்ளன.
இது புதிய பிரச்சினை அல்ல. எங்கள் மக்களின் நலனுக்காக, எந்த புகழையும் எதிர்பார்க்காமல், நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தனிப்பட்ட சந்திப்பை நாடுவது உதவும் என்றால், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்யவும் தயங்க மாட்டார்கள் என தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017இல் மாநிலங்களவையில் பேசிய கனிமொழி கருணாநிதி; இலங்கையில் நடந்த போர்களுக்குப் பிறகு, 2009-இல் இலங்கை படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) முழுமையாகத் தோற்கடித்த பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களை மறுவாழ்வு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளிலும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் உண்மையில், எவ்வளவு மறுவாழ்வு நடந்துள்ளது? அவர்களுக்கு எவ்வளவு உதவி வழங்கப்பட்டுள்ளது? எத்தனை பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன? பெரிதாக எதுவும் இல்லை.
எவ்வளவு நடந்துள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கவும் முடியவில்லை. இன்னமும், அங்குள்ள மக்கள் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. சரியான பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழில், எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் - அவர்களில் பலர் இங்கே இரண்டு தலைமுறைகளாகவும், மூன்று தலைமுறைகளாகவும் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
தி.மு.க எப்போதுமே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது - இந்தியக் குடியுரிமைக்காகப் போராடி வரும் இலங்கைத் தமிழர்களில், திரும்பிச் செல்ல விரும்புவோரைச் செல்ல விடுங்கள். ஆனால் இந்த அகதிகளில் பலர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தியா அவர்களின் தாயகம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசவும் தயார் என தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்