நெல்லையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஐ.டி. உழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி வியாழக்கிழமை அமைச்சர்களுடன் நேரில் சென்று கவினின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்று கவினின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர். அப்பொது, அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாவது: “இப்படிப்பட்ட ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்பதுதான் இந்த சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. நடந்திருக்கக்கூடாத ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியிருக்கிறது. தங்கள் இளம் மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று நான், அமைச்சர்கள், இங்கு இருக்கும் அனைவரும் அவர்களை சந்திக்க வந்திருக்கிறோம். நிச்சயமாக அவர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை அரசு உருவாக்கித் தரும்.
கவினைக் கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கொலையான கவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு பதில் அளித்த கனிமொழி, “விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையை முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படும்.” என்று கூறினார்.
மேலும், கவின் கொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் அழைத்து மிரட்டி இருக்கிறார். பணி மாறுதல் செய்யப்பட்டவர் மீண்டும் அதே இடத்துக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இதில் யார் யார் சந்தந்தப்பட்டிருக்கிறார்களோ அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பதிலளித்த கனிமொழி, “நிச்சயமாக, இது நாடு தழுவிய ஒரு பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் பலமுறை நாங்கள் குரல் எழுப்பியிருக்கிறோம். வி.சி.க தலைவர் திருமாவளவனும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.” எனக் கூறினார்.