தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறலாம்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டை பாதிக்காத வகையிலும், தென் மாநிலங்கள் பாதிக்காத வகையிலும், முக்கியமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை பாதிக்காத வகையிலும் எடுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் வைத்திருக்கிறார்.
இது தமிழ்நாட்டின் நலனை மையமாகக் கொண்ட ஒரு கூட்டம். அதனால், நம்முடைய உரிமைகளுக்காக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இதில் தனிப்பட்ட கெளரவ உணர்வுகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகாக தமிழ்நாட்டின் நலனைப் பலி கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்திருக்கிறார். தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டை பாதிக்கக் கூடாது.
சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, Pro Rata அடிப்படையில் தொகுதி சீரமைப்பில் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறையாது என்று கூறினார். ஆனால், அது தெளிவு தரவில்லை, பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் தான் ஒவ்வொரு முறையும் செய்யப்பட்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை, அதன் அடிப்படையில் நடக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் மக்கள் தொகை குறைப்பை, வெற்றிகரகமாக செய்து இருக்கிறார்கள். பல மாநிலங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போனதால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
இதனால், மக்கள் தொகையை குறைத்த மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது. மேலும் மாநிலம் இடையே சீரான நிலைமை வரும் வரை, இது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கருத்து அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், இது நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது, மறுபடியும் மகளிர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு பாதிக்க கூடாது என்பதற்காக முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 39 ஆக இருக்கிறது, அதனைக் குறைக்கக் கூடாது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து இருக்கும். தமிழ்நாடு எம்.பி-க்கள் மொத்தம் இருக்கக்கூடிய 543-ல் 7.18% சதவீதம் தான் இருக்கிறோம். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு பிறகு 5% சதவீதமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதற்கு ஒரு தெளிவான பதிலை உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்கிறார். இதில் ஒரு தெளிவு பெற்றால் தான், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும்.
அனைத்து கட்சி கூட்டத்தின் வாயிலாக ஒருமித்த குரலை எழுப்ப முடியும். எல்லாருடைய கருத்தையும் கேட்ட பிறகு அதற்கு ஒரு சரியான தீர்வை காண வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணம். இது தான் திமுகவின் நிலைப்பாடு" எனத் தெரிவித்தார்.
செய்தி - க. சண்முகவடிவேல்