திமுக எம்.பி. கனிமொழி மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுடன், 700 கி.மீ பயணித்து தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டைப் பார்வையிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கியுள்ளனர். பலரும் தொகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்று பார்க்கவும் முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில்தான் திமுக எம்.பி கனிமொழி சென்னையில் இருந்து நேற்று இரவோடு இரவாக 700 கி.மீ. பயணித்து தனது தொகுதியான தூத்துக்குடிக்கு சென்றார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கனிமொழி எம்.பி அனுப்பிய கடிதத்தில் , தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கனிமொழி இன்று காலை தனது தொகுதியான தூத்துக்குடிக்கு மருத்துவப் பொருட்களுடன் சென்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிறப்பு கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் வார்டை பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனை டீன் டாக்டர் திருவாசகமணி, மாவட்ட மருத்துவமனையில் கொரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டின் உள்கட்டமைப்பு பணிகள், லிஃப்ட் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி தேவைப்படுவதாக கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அந்த நிமிடமே தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் 50 லட்ச ரூபாயை ஒதுக்கிய கனிமொழி இதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “அரசு பொதுமக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 நிவாரணம் என்பது போதாது. அதனால், அரசு இன்னும் அதிகமான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். அதே போல, மீனவர்கள் விசயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது கொரோனாவுக்கு எதிராக எல்லோரும் ஒன்றாக இணைந்து வேலை செய்யக்கூடிய நேரம். எனவே, அரசாங்கத்திற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசும் வரும்முன் காப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். கொரோனா இன்னும் அதிகமாக பரவக்கூடும் என்ற சூழ்நிலை வரும் என்றால் அரசு அதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.” என்று கூறினார்.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தின் பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதி ஒதுக்கிய நிலையில், திமுக எம்.பி. கனிமொழி முதல் எம்.பி.யாக களத்திற்கு சென்று மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் தூத்துக்குடி தொகுதியில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்வையிட்டு வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.