தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு நிதி கொடுக்காமல் ஒன்றிய அரசு கைவிரிச்சிட்டாங்க. தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024இன் மீது நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள் குறித்தும், அதை முறையாகக் கையாளாத ஒன்றிய அரசின் போக்குகள் குறித்தும் பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு முறையான நிதியை வழங்காமல் பாகுபாடு காட்டி வரும் ஒன்றிய அரசின் செயல்கள் குறித்து விவரித்தார். குறிப்பாக, மிக்ஜாம் புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட தொகை ரூ. 37,000 கோடி. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையாக ரூ. 6,675 கோடி கோரப்பட்டது. ஆனால், இதுவரையில், ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியும் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்படவில்லை.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையைத் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் துயர் தீர்க்கும் வகையில் செயல்படாமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் பாதிப்புகளுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், பேரிடர் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்க்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 மீதான விவாதத்தின் போது வலியுறுத்தினார்.
நன்றாகப் படித்துக் கொண்டு இருக்கின்ற மாணவனைப் பள்ளி வகுப்புக்கு வெளியே நில் என்று சொல்கிற மாதிரி ஒரு நிலைமையைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டு இருக்கக்கூடிய காரணத்தினால், மக்களைப் பற்றிக் கவலைப்படக்கூடிய, தொடர்ந்து நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்ற காரணத்தினாலேயே, நாங்கள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம்.
தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்திலும் அதே பிரச்சனை தான் என பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி இரண்டு கைகளை விரித்து செய்கை செய்தார். இதனைக் கண்ட கனிமொழி எம்.பி, இதேபோன்றுதான் நிதி கொடுக்காமல் இரண்டு மாநிலத்தையும் ஒன்றிய அரசு கைவிரித்து விட்டதாகக் கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“