மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கனவு இதழான தி ரைசிங் சன் இதழ் வெளியீட்டு விழாவில், திமுக எம்.பி-யுமான கனிமொழி கலந்துகொள்ளாததையடுத்து, கலைஞரின் மகளுக்கே அழைப்பு இல்லையா என்று கனிமொழி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அவர் ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், பத்திரிகையாளர், பதிப்பாளர், கதாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக ஆளுமையாக இருந்தார். ஒரு அரசியல் கட்சிக்கு தனியாக பத்திரிகை வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்த கருணாநிதி, முரசொலி இதழை நடத்தி வந்தார். அதே போல, ஆங்கிலத்திலும் இதழ் கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது.
திமுகவின் கருத்துகளை பிற மொழியினரும் பிற மாநிலத்தவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 1971ம் ஆண்டு கலைவாணர் அரங்கில் ‘தி ரைசிங் சன்’ எனும் ஆங்கில இதழ் தொடங்கப்பட்டது. முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘தி ரைசிங் சன்’ ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
அதற்கு பிறகு, 2005ம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் அன்றைக்கு திமுக தலைவராக இருந்த கருணாநிதியால் மீண்டும் ‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழ் தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான், கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்திய அரசியலில் முக்கிய மாநில கட்சியாக உள்ள திமுகவின் கொள்கைகளையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பிற மாநிலத்தவர்களும் வெளிநாட்டினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
‘தி ரைசிங் சன்’ மாதம் இருமுறை இதழ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 26ம் தேதி வெளியிடப்பட்டது. ‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதழின் முதல் பிரதியை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் ஆசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைவாதம் ஆதிக்கம் செலுத்தும் நேரத்தில் திராவிட இயக்க கொள்கைகளையும் திமுக அரசின் வளர்ச்சி மாதிரியையும் முன்னிலைப்படுத்துவதே ‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழின் நோக்கம் என்று கூறப்பட்டது. ‘தி ரைசிங் சன்’ மாதம் இருமுறை வெளியாகும் ஆங்கில இதழின் வெளியீட்டாளர் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இதழ் வெளியீட்டு விழாவில் உடனிருந்தார்.
கலைஞரின் கனவு இதழான ‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழ் வெளியீட்டு விழாவில், திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். ஆனால், கருணாநிதியின் மகளும் திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி கலந்துகொள்ளவில்லை. இதனால், ‘தி ரைசிங் சன்’ இதழ் வெளியீட்டு விழாவில் கனிமொழி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகளின் முனுமுனுப்பு சத்தம் வெளிப்படையாகவே கேட்டது.
‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழ் வெளியீட்டு விழாவில் கனிமொழி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியபோது, அழைப்பு விடுத்தால்தானே கலந்துகொள்வார். கலைஞரின் கனவு இதழன ‘தி ரைசிங் சன்’ ஆங்கில இதழ் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை அதனால்தான் அவர் கலந்துகொள்ளவில்லை. கலைஞர் குடும்பத்தில் பத்திரிகைத் துறையில் மற்றவர்களைவிட அனுபவம் உள்ளவர் கனிமொழி. ஆனால், அவருக்கே அழைப்பு இல்லை என்று கனிமொழியின் ஆதரவு வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“