தி.மு.க. முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறேன் என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கூறிவந்தார்.
இந்நிலையில், சித்திரை 1ஆம் தேதி அவர் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலில் மு.க. ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.
தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி, சபரீசன், கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல் என்று பட்டியல் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் தி.மு.க.வுக்கு ரூ.1500 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கனிமொழிக்கும் ரூ.800 கோடி அளவிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கனிமொழி, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “தி.மு.க.வின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் உள்ள சம்பந்தப்பட்ட காணொலியை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும்.
எவ்வித ஆதாரமும் இன்றி வீடியோ வெளியிட்டுள்ள அண்ணாமலை ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. சார்பாக அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோரும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“