Kanimozhi questions Minister Piyush Goyal for hindhi issue: நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்தார். பின்னர் கனிமொழி ஆங்கிலத்தில் பதில் அளிக்க வலியுறுத்தியதால், அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
சமீப காலங்களில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளித்து வருவது வழக்கமாகி உள்ளது. நாடாளுமன்ற அவை விதிப்படி ஒரு மொழியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு வேறு மொழியில் பதில் அளிக்க கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை. இருப்பினும் ஹிந்தி தெரியாதவர்களுக்காக மத்திய அமைச்சர்கள் ஆங்கிலத்திலேயே பதில் அளித்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் சிலர் ஹிந்தியிலேயே பதில் அளிக்கின்றனர். கடந்த மக்களவை அமர்வில் மதிமுக எம்பி கணேஷ மூர்த்தி தமிழ்நாட்டிற்கான அந்நிய முதலீடு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பியூஸ் கோயல், ஹிந்தியில் பதில் அளித்தார். இதற்கு கணேஷ மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தபோது, அவையில் மொழிப்பெயர்ப்பு வசதி இருக்கிறது என்று கூறிய அமைச்சர் பியூஷ் கோயல், எனவே ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் நான் ஹிந்தியில்தான் பதில் அளிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்றும் மக்களவையில் ஹிந்தி பிரச்சனை எழுந்தது. திமுக எம்பி கனிமொழி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
ரேஷன் என்பது மாநில சார்ந்த விவகாரம். தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் தருகிறோம். இந்த நிலையில் ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி பொருள் வழங்குவது. அதற்கான செலவை யார் ஏற்பது என்று கேட்டார்.
இதையும் படியுங்கள்: மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, தமிழகத்தில் யாரும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு கூறுவது உண்மையா?
இதையடுத்து அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளிக்க தொடங்கினார். அவரை தடுத்த கனிமொழி, நான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினேன். நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்கள். உங்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக தெரியுமே, அதிலேயே பேசலாமே. எல்லோருக்கும் புரியுமே. நீங்கள் ஹிந்தியில் பேசினால், கேள்வி கேட்ட எனக்கு எப்படி புரியும்? என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.
உடனே அமைச்சர் பியூஷ் கோயல், சகோதரி கனிமொழியை நான் மிகவும் மதிக்கிறேன், ஆங்கிலத்திலேயே பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.
பின்னர், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளுக்கு 100 சதவீதம் மத்திய அரசே நிதியை ஏற்கும். இத்திட்டத்தில் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஒரு மாதத்தில் வாங்காமல் போன நிலுவை பொருட்களை பயனாளிகள் அடுத்த மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.