Raadhika Sarathkumar and Kanimozhi To Contest From Thoothukudi Loksabha Constituency: கனிமொழி, ராதிகா சரத்குமார் இடையே தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் மோதல் நடைபெற இருக்கிறது. ராதிகா சரத்குமார் எந்த அணி சார்பில் களம் இறங்க இருக்கிறார்? என்பது மட்டுமே சஸ்பென்ஸ்.
கனிமொழி, இருமுறை திமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆன கனிமொழி அடுத்தபடியாக நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று எம்.பி. ஆக விரும்புகிறார்.
இதற்காக கனிமொழி தேர்வு செய்திருக்கும் தொகுதி, தூத்துக்குடி. ஏற்கனவே இதே மாவட்டத்திற்குட்பட்ட வெங்கடேசபுரம் கிராமத்தை நாடாளுமன்ற உறுப்பினருக்கான மாதிரி கிராமமாக தேர்வு செய்தார் கனிமொழி. கடந்த சில ஆண்டுகளில் அந்த கிராமத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
இதன் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனக்கு கிடைத்திருக்கும் இமேஜ் மற்றும் அந்தப் பகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமூகத்தினரின் வாக்குகளை மனதில் வைத்து கனிமொழி இந்தத் தொகுதியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களை கடந்த இரு வாரங்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு மேற்கொண்டு வருகிறார் கனிமொழி.
இந்த ஊராட்சி சபைக் கூட்டங்கள், கிட்டத்தட்ட கனிமொழியின் தேர்தல் பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது. சில இடங்களில் நூலகங்களுக்கு அந்தப் பகுதியினரின் கோரிக்கையை ஏற்று தனது சொந்தப் பொறுப்பில் நூல்களை வழங்கியிருக்கிறார்.
கனிமொழி இப்படி தூத்துக்குடியில் சுழன்றுகொண்டிருக்கும் சூழலில், சமத்துவ மக்கள் கட்சி மகளிரணி தலைவி ராதிகா சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் அந்தக் கட்சியின் தென்மண்டல மகளிர் அணிக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். சரத்குமாரும் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஏற்கனவே சரத்குமார் தென்காசி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டபோது, ராதிகா சரத்குமார் இந்தப் பகுதியில் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த காலங்களில் திமுக.வுக்காகவும் அவர் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். இப்போது முதல் முறையாக அவரே தேர்தலில் களம் காண முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமூக வாக்குகளை சரத்குமார் மூலமாகவும், நாயுடு சமூக வாக்குகளை தனது பிரசாரம் மூலமாகவும் கொண்டு வந்து சேர்க்க முடியும் என ராதிகா சரத்குமார் நம்புவதாக சொல்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த சரத்குமார், அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். எனவே அதிமுக அணியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணிப் பேச்சுகளே தொடங்காத நிலையில், தூத்துக்குடியில் ஸ்டார் வேட்பாளர்கள் களம் இறங்க ஆயத்தமாகியிருப்பது பரபரப்பு விவாதம் ஆகியிருக்கிறது.