தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேருந்து நிலையமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.57 கோடியிலும், அம்பேத்கர் நகரில் ரூ.29 கோடியில் ஸ்டெம் பார்க்கும் (STEM PARK) புதிதாக கட்டப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.8) திறந்து வைத்தனர்.
அதுபோல, ரூ.87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடமும், பொதுப்பணித்துறை சார்பில் கழுகுமலை எட்டையபுரத்தில் ரூ.5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.75 கோடி மதிப்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயநலக் கூடம் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய கனிமொழி, “ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலும் அரசியலை கொண்டு வர சிலர் நினைக்கின்றனர். நாங்கள்தான் கொண்டு வந்தோம், நாங்கள்தான் கொண்டு வந்தோம் என தெரிவித்து ஏதாவது பிரச்சனையை கொண்டு வர நினைக்கிறார்கள் எதிர்கட்சியினர்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் தமிழக அரசின் நிதி மற்றும் உழைப்பு உள்ளது. இது மட்டும் இன்றி மத்திய அரசுக்கும் ஐந்து சதவீதம் மக்களின் வரிப்பணம் ஜிஎஸ்டி மூலம் அனுப்பப்படுகின்றது. மக்களின் வரிப் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தருவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது. அவர்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மட்டும் அதிகமாக கொடுத்து வருகிறார்கள்.
இதுபோல் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் பெரும்பாலான பணம் மாநில அரசின் பணம். பெயர் மட்டும் அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள். மோடி நாட்டின் பெயரை மாற்ற முயற்சி செய்கிறார். இதுபோல் பலவற்றிலும் தங்களின் வைத்து அரசியல் செய்ய நினைப்பது மத்திய அரசு என தெரிவித்தவர், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“