கனிமொழி, தூத்துக்குடி எம்.பி. தொகுதியில்: கனிமொழியை தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கிறோம் என தென் மாவட்ட பிரமுகர்கள் அழைப்பு விடுத்தனர்.
கனிமொழி, தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. திமுக நாடாளுமன்றக் குழு தலைவராகவும், திமுக மகளிரணி தலைவியாகவும் பொறுப்பு வகிக்கும் கனிமொழி, தற்போது 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது பதவிக் காலம் 2019-ல் முடிகிறது.
கனிமொழி அடுத்தகட்டமாக மக்களை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக.வில் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கனிமொழியை திருச்சி அல்லது தஞ்சாவூரில் போட்டியிடும்படி கட்சிப் பிரமுகர்களுடன் அந்தப் பகுதியில் கணிசமாக உள்ள முத்தரையர் சமூகப் பிரதிநிதிகளும் நேரில் வந்து கோரிக்கை வைத்தார்கள். அதேசமயம், கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் பல்வேறு பணிகளை செய்திருக்கிறார்.
குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம், அந்தப் பஞ்சாயத்து கிராமங்கள் அனைத்திற்கும் குடிநீர் வசதி, சோலார் விளக்குகள், சொந்தச் செலவில் அந்தப் பகுதியில் 65 ஏக்கரில் பரவியிருக்கும் குளம் சீரமைப்பு ஆகிய பணிகளை செய்தார். தமிழ்நாட்டில் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த தத்தெடுப்புத் திட்டத்தை சரியாக மேற்கொள்ளாத நிலையில், கனிமொழி இங்கு ஆற்றியிருக்கும் பணிகள் அந்த ஏரியாவில் அதிகம் பேசப்படுகிறது.
கனிமொழி, தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் போட்டியிட கோஷம்
இதை முன்வைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் நாடார், யாதவர், தலித் சமூக பிரதிநிதிகள் கனிமொழியை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் ஜூலை 15-ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி சென்னை தி.நகரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க கனிமொழி வந்தார். அங்கு அவரை வரவேற்க திரளான திமுக.வினர் மற்றும் தென் மாவட்ட பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர்.
கனிமொழி வந்தபோது தென் மாவட்ட பிரமுகர்கள் பலரும், ‘தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். சிரித்தபடி சென்ற கனிமொழி, பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போதும் அதே கோஷங்களை இன்னும் பலமாக எழுப்பினர்.
உடனே கோஷம் எழுப்பியவர்களை பார்த்து திரும்பிய கனிமொழி, ‘அப்போ திருநெல்வேலி தொகுதியில் நின்னா ஜெயிக்க வைக்க மாட்டீங்களா?’ என சிரித்துக் கொண்டே கேட்டார். ‘எங்க நின்னாலும் ஜெயிக்க வைக்கிறோம். தூத்துக்குடியில் நின்னால், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிப்பீர்கள்’ என அவர்கள் கூறினர். புன்னகைத்தபடி அங்கிருந்து கிளம்பினார் கனிமொழி.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி ஒப்புக்கொண்டதாகவே இதை அவரது ஆதரவு கட்சிப் பிரமுகர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கனிமொழிக்கான பிரசார பணிகளை சமூக ஊடகங்களில் இப்போதே முன்னெடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.
கனிமொழி, தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் களம் இறங்குவாரா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.